பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மருத்துவ விஞ்ஞானிகள்



உலகத்தின் பழைய மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சாக்சேனியம், சீனம், தமிழ், மொழிகளைப் போல ஃபிரெஞ்சு மொழியும் அந்த நேரத்தில் உரை நடைத் தெளிவிலும், எழிலிலும் தன்னிகரற்று விளங்கியதோடு அல்லாமல், மற்ற நாட்டினர்களும் வியந்து போற்றுமளவுக்கு வளமுடையதாக வளர்ந்திருந்தது.

அதனால் அந்த மொழி ஃபிரெஞ்சு நாட்டு மக்களின் உயர் குடியினர் மொழியாகவும், கற்றோர் போற்றும் இலக்கிய மொழியாகவும், வெளிநாட்டார் தொடர்பு மொழியாகவும் பெருமை பெற்றிருந்தது! இவைதானே ஒரு செம்மொழிக்குரிய தகுதிகள், சிறப்புக்கள்? அவற்றை ஃபிரெஞ்சு மொழி பெற்றிருந்ததால், உலகம் போற்றும் இலக்கியங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிகள், புரட்சிக் கருத்துக்கள் அனைத்தும் அந்த மொழியிலே தோன்றி, வளர்ந்து அந்த நாட்டுக்கு மேலும் புகழைச் சேர்த்துக் கொண்டிருந்தது.

அத்தகைய பிரான்சு நாட்டிற்குப் பாரீஸ் என்ற நவநாகரிக நகரம் தலை நகரமாக விளங்கியதை நாம் நன்கு அறிவோம். அது வரலாற்றுப் பெருமை பெற்ற நகரமாகும்.

அந்த நகரம்தான், உலகப் புகழ் பெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட நகரம். அந்தப் புரட்சியிலே தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப் பொரும் தத்துவங்களைத் தோற்றுவித்த நகரமும் பாரீஸ்தான்! இது உலகறிந்த வரலாறாகும்.

இத்தகைய உலகப் புகழ் பெற்ற ஃபிரெஞ்சு ஆட்சியில் பல தொழில்கள், அதன் வருவாய் பெருக்கத்துக்காக வளர்ந்து நடைபெற்று வந்தன. அவற்றுள் ஒன்று உயிர் குடியினர் ஆடைகளாக அணிந்து கொள்ளும் பட்டுத் தொழிலுமாகும்.

பிரெஞ்சு அரசுக்கு, இந்தப் பட்டுத் தொழிலால் வருமானம் மிக அதிகமாக வந்தது. பட்டுத் தொழிலில் ஆயிரக் கணக்கான நெசவாளர்கள் பணியாற்றினார்கள்.

பட்டுத் தொழில் இயந்திர ஆலைகள் மூலமாகவும், குடும்பங்கள் குடும்பங்களாக, குடும்பத் தொழிலாகவும் அது பெருகியிருந்தது.