பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மருத்துவ விஞ்ஞானிகள்



எதற்கெடுத்தாலும் பாஸ்டியரை அழைத்து யோசனை கேட்குமளவுக்கு நெருக்கமான தளபதிகளுள் ஒருவராக விளங்கினார் ஜோசப் பாஸ்டியர் என்ற படை தளபதி.

நெப்போலியனது அரசியல் தோல்விகளுக்குப் பிறகு, அதாவது, அந்த மாவீரனுடைய மரணத்திற்குப் பிறகு, யார் யார் அவருடன் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்களோ, அவர்கள் அனைவரும் வறுமைக் கடலிலே தள்ளப்பட்டுத் தத்தளித்தார்கள்.

வாழ்க்கை ஆதாரத்தின் நம்பிக்கைக்குரிய ஆதரவு என்ற துரும்புகள், பிடிப்புகள், எதுவுமற்ற பயங்கரச் சுழல்களிலே சிக்கி வாழ்க்கையில் ரத்தக் கண்ணிரைச் சிந்திக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பயங்கர வாழ்க்கையின் வேதனைக் கொடுமை களை அனுபவித்தவர்களில் ஜோசப் பாஸ்டியர் என்ற தளபதியும் ஒருவராவார்.

இறுதியாக, நிர்கதியாக நிலை தடுமாறி அலைந்த அந்த ஜோசப் என்ற படைவீரர் தளபதி, தனது குடும்பத் தொழிலான தோல் பதனிடும் தொழிலை, தனது குடும்பத்தினர் வயிற்றை வளர்க்கச் செய்யத் துவங்கினார்.

ஜோசப் பாஸ்டியருக்கு அந்தத் தோல் தொழிலில் போதிய வருமானமும் வரவில்லை. இருந்தாலும், அதை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அந்தக் குறை வருமான வாழ்க்கை யோடுப் போராடிக் கொண்டே காலம் தள்ளினார்.

ஃபிரான்ஸ் நாட்டிலே ஜூரா என்பது ஒரு மாநிலம். அது ஃபிரான்சுக்குக் கிழக்குப் பகுதியிலே உள்ளது. அந்த மாநிலத்தில் ‘டோல்’ என்பது ஒரு சிற்றுர்.

இந்தச் சிறு கிராமத்தில்தான் ஜோசப் பாஸ்டியர் தனது தோல் பதனிடும் தொழிலை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அந்தச் சிறு ஊரிலே பிறந்தவர்தான், நீங்கள் படிக்கப் போகும் அறிவியல் அறிஞரான லூயி பாஸ்டியர் என்பவர். அவர் ஜோசப் பாஸ்டியரின் முதல் மகன் ஆவார். தாயார் பெயர் ஜூன் எடினட் ரோக்யீ என்பதாகும்.