பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

119


கல்வியில் மிக ஆர்வமுடையவனாக இருக்கிறான். பாரீஸ் நகரிலே இருக்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலே சேர்ந்து கல்வி பெற விரும்புகிறான். இப்போது அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பரிந்துரை செய்கின்றார். எப்படியும் லூயியை அரசுப் பள்ளி ஆசிரியராக்கிட முயற்சி செய்யுங்கள் என்கிறான். ஆனால், எனக்கென்னமோ லூயி அவ்வளவு தூரமுள்ள பாரீஸ் நகருக்குச் சென்று படிப்பதில் விருப்ப மில்லை. நீ என்ன சொல்கிறாய் பேர்பையர் என்று பேச்சோடு பேச்சாக ஜோசப் பாஸ்டியர் தனது எண்ணத்தை அவரிடம் எடுத்துரைத்தார்.

உடனே பேர்பையர், “ஜோசப், லூயி பாரீஸ் வந்து படிப்பதை நான் ஆதரிக்கின்றேன். நான் அவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தரத் தயார்” என்றார்.

பாரீஸ் நகரில் உன்னைத் தவிர வேறு யார் அவனுக்கு உதவி செய்வார்கள்? ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் யாரும் எனக்குத் தெரியாதே! உனக்கு யாரையாவது தெரியுமா? என்று கேட்டார் ஜோசப்.

எதற்கும் நீ கவலைப்படாதே. அதற்கெல்லாம் நான் பொறுப்பு ஏற்கிறேன். பாரிஸ் நகர் கல்வித் துறையில், பார்பட் என்ற ஒரு நண்பர் இருக்கிறார். அவரை நான் நன்கு அறிவேன். அவரும் நமது ஜூரா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். அவர் கல்வித் துறையில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். பிறருக்கு உதவி செய்வதில் அவர் சிறந்த மனிதர், பாடம் போதிப்பதிலும் வல்லவர், மாணவர்கள் கல்வியில் அக்கறையுடையவர், எல்லா மாணவர்களிடமும் அன்போடு பழகுபவர், அவர் பணியாற்றும் பள்ளியில் சம்பளமும் குறைவு. தயங்காமல் லூயியைப் பாரிஸ் நகருக்கு அனுப்பு ஜோசப், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார் பேர்பையர்!

பாரீஸ் நகருக்குச் சென்று தனது மகன் கல்வி கற்பதில் விருப்பமில்லாமல் இருந்த ஜோசப் பாஸ்டியர், நண்பர் கூறிய அறிவுரைகளைக் கேட்டதற்குப் பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டார்.