பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

மருத்துவ விஞ்ஞானிகள்



ஆர்பாய் பள்ளித் தலைவர் ரொமானெட், லூயியின் முயற்சி வினானதைக் கண்டு வருந்தினார். இருப்பினும் சந்திக்கும் போதெல்லாம், மீண்டும் பாரீசுக்குப் போ, படி ஆசிரியராக, முன்னேறு என்று அடிக்கடி லூயியின் கல்வி ஆசையைத் துண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.

பள்ளித் தலைமையாசிரியர் இவ்வாறு தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை, லூயி அடிக்கடி சிந்திப்பார் ஒரு நாள், தான் பாரீஸ் நகரக் கல்வியை விட்டு விட்டு வந்தது தவறுதான் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்!

மறுபடியும் தனது பெற்றோரிடம், நயமாக, பணிவாக, கனிவாக, தழ தழத்தக் குரலிலே, மெதுவாக, பாரீஸ் நகரத்தில் மீண்டும் கல்வி பெறவேண்டும் என்று கேட்டார். தகப்பனார் கோபப்படாமல், சம்மதம் தரவே இல்லை. மெளனமாக இருந்தார்.

அடிமேலடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? அந்த எண்ணத்திலே தந்தையிடம் கெஞ்சி, கொஞ்சி தமது விருப்பத்தை வாழைப் பழத்தில் ஏற்றும் ஊசியைப் போல வற்புறுத்திக் கொண்டே வந்தார் லூயி பாஸ்டியர்!

இறுதியாக ஒருநாள் தந்தை ஒப்புதல் தந்தார். மேல் படிப்புக்கு லூயியை அனுப்பிட சம்மதித்தார். பாரீஸ் நகருக்கு அனுப்பவா? அதுதானில்லை. ஆர்பாய் நகருக்கு அருகே உள்ள ‘பெசன்கான்’ நகரில் உள்ள பள்ளிக்கு அனுப்பினார்!

ஜோசப் பாஸ்டியர் இருக்கும் இடத்திலே இருந்து இருபது மைல் துரத்தில் ‘பெசன்கான்’ உள்ளது. அங்கே அடிக்கடி தனது தொழில் சம்பந்தமாக அவர் செல்வார். போகும் நேரமெல்லாம் மகனைப் பார்க்க முடியுமல்லவா?

அதனால், லூயிக்குப் பெற்றோர் பாசம் அடிக்கடி ஏற்படாது. ஒரு வேளை அந்த ஆசை வருமானால், போய் பார்த்து விட்டுத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறதல்லவா? அந்தத் தைரியத்தால் லூயியை பெசன்கான் நகர் பள்ளியிலேயே சேர்த்தார். ஜோசப் பாஸ்டியர்!