பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

135



ஆசிரியாரகும் தகுதி பெற்றுவிட்ட தனது மகனுடைய கல்வி வெற்றியைக் கடிதம் மூலமாக அறிந்த லூயியின் பெற்றோர்களுக்கு, பழம் நழுவிப் பாலில் விழுந்த சுவை போல மகிழ்ந்தார்கள்.

பேராசிரியர் பாலார்டும், லூயி பட்டம் பெற்று விட்டதை அறிந்து உவகை பெற்றார். எதிர்காலத்தில் அறிவியல் சாதனை களைக் கண்டுபிடிக்குமளவிற்கு லூயி அறிவு பெற்றவர் என்பதை உணர்ந்த இரசாயனப் பேராசிரியர் பாலார்டு, அவருக்கேற்ற பயிற்சியை அளிப்பதற்காக, தன்னிடமே அவரை உதவியாளராக அமைத்துக் கொண்டார்.

ஆனால் பிரெஞ்சு அரசு, லூயியை வேறோர் இடத்தில் அரசு ஆசிரியராக நியமனம் செய்தது. பேராசிரியர் பாலார்டுக்கு அரசாங்கத்திலிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திட எண்ணி, கல்வி அமைச்சரை அவர் சென்று சந்தித்தார்.

லூயி பாஸ்டியர் சிறந்த அறிவியல் அறிஞரென்றும், அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெறும் வரையிலாவது அவர் பாரிஸ் நகரத்தில் பணியாற்றுவது நல்லது என்றும், கல்வி அமைச்சரைச் சந்தித்துப் பேசியபோது பேராசிரிய பாலார்டு கூறினார்.

ஆசிரியர் ஒருவரே தனது மாணவன் திறமையை வெகுவாகப் பாராட்டிப் பேசுவதைக் கண்ட கல்வி அமைச்சர் மகிழ்ந்தார் கல்வி அமைச்சகம் போட்ட அரசு உத்தரவை ரத்து செய்தார். உடனே, பாலார்டு அப்போதே அமைச்சருக்கு நன்றி கூறி திரும்பினார்.

தொலை தூரத்தில் அரசு தன்னை ஆசிரியராக நியமனம் செய்த ஆணையை, உடனடியாக பேராசிரியர் பாலார்டு ரத்து செய்துவிட்ட செயலுக்கு எப்படி கைம்மாறு செய்யப் போகிறோம் என்று எண்ணிய லூயி, பேராசிரியர் பாலார்டுக்கு உதவியாளராக அமர்ந்து அவரது ஆய்வுக்கூடத்தில் பல சோதனைகளைச் செய்து வந்தார்.