பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

147



இந்த இரு பீர் கலவைகளை நான் சோதனை செய்து பார்த்து விட்டுப் பதில் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

இல்லம் வந்த லூயி, தான் கொண்டு வந்த பீர் வகை இரண்டையும் “மைக்ராஸ் கோப்” உதவியால் கலவைகளை ஆராய்ந்தார். அந்த இரண்டு வகை பீர் கலவைகளிலும் இரண்டு வகையான நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டார்.

அந்த இருவகை நுண்ணுயிர்களில் ஒருவகை பீர் கலவையில் வட்ட வடிவமான நுண்ணுயிர்களாக இருந்தன, இந்த நுண்ணுயிர்கள்தான் கலவையைப் புளிக்க வைத்து, பீராக மாற்றுகின்றன என்பதை அறிந்தார் லூயி.

அடுத்து மற்றொரு வகை பீர் கலவையிலுள்ள நுண்ணுயிர்கள் நீளமாக இருந்தன. இவைதான் கலவையை அழுகவைத்து வீணாக்குகின்றன என்பதை லூயி உணர்ந்தார்.

ஆனால், இரண்டாவது வகையான நீண்ட நுண்ணுயிர்கள் எவ்வாறு கலவைக்குள் வந்தன? என்று லூயி சிந்தித்தார்.

காற்றின் மூலமாகவே அந்த நீண்ட வடிவமான நுண்ணுயிர் கள் கலவையில் விழுந்து அழுகச் செய்து விடுகின்றன என்று அவர் தனது சோதனை வாயிலாகக் கண்டார். இத்துடன் ஆய்வை நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்ய முடிவெடுத்தார்.

இந்த சோதனை முடியவில்லை, அதற்குள் பிரெஞ்சு அரசு பாரிஸ் நகருக்கு அவரை இடமாற்றம் செய்துவிட்டது. அங்கே அவருக்கு அதிக அளவு வேலைகள் இருந்தன. அத்துடன் சோதனை செய்வதற்குரிய நல்ல ஆராய்ச்சிக் கூடமும் அங்கில்லை; போதுமான மற்ற துணைக் கருவிகளுமில்லை. ஆனாலும், தொடர்ந்து அதற்குரிய ஆராய்ச்சிகளை லூயி செய்து வந்தார்.

இந்த நேரத்தில் லூயி பாஸ்டியரின் மூத்தமகள் இறந்து விட்டாள். மகளை இழந்து துயரத்தினாலே, தொடர்ந்து அந்த ஆராய்ச்சியை அவர் நடத்தவில்லை : இவ்வாறு சில மாதங்கள் சென்றன.