பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

மருத்துவ விஞ்ஞானிகள்



வெறிநாயின் ரத்தத்தை எடுத்தார். அதை நல்ல நாய் உடலிலே ஊசி மூலமாக ஏற்றினார். நல்ல நாய்க்கு அதனால் எந்தவித உடல் பாதிப்பும் உண்டாகவில்லை. இரண்டாவது முயற்சியையும் கை விட்டார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு முறைக்கு இருமுறை வெறி நாய் உடல் உறுப்புக்களைச் சோதித்தாகி விட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடியே இருந்தார்!

நாய் நோய் மூளையைத் தாக்குவதால் தானே, வெறிநோய் பிடிக்கிறது? அப்படியானால், நோய்க்கு காரணமான கிருமிகள் வெறிபிடித்த நாயின் மூளையில்தானே இருக்க வேண்டும் என்று எண்ணிய லூயி பாஸ்டியர், வெறி நாயின் மூளையை மைக்ரோஸ்கோப் மூலமாக ஆராய்ந்தார். ஒன்றும் அவருக்கு அதிலேயிருந்தும் புலப்படவில்லை.

இருந்தாலும், கொஞ்சமும் மனம் தளராமல் அந்த வெறி நாய் மூளையே எடுத்து திரவ வடிவமாக்கினார். நல்ல நாய் ஒன்றைக் கொண்டுவரச் செய்து; அதன் மூளையுள்ளே, அந்த திரவ வடிவமான பொருளை ஊசி மூலம் செலுத்தினார். என்ன ஆயிற்று தெரியுமா - அதன் முடிவு?

நல்ல நாய் வெறி நாயானது; இடைவிடாது குறைத்தவாறே காணப்பட்டது. அதன் வாயும் நாக்கும் கோரமாக அலை மோதின. நல்ல நாயின் உடலில் ரேபியீஸ் நோயை உண்டாக்கும் வழி என்ன என்பதை லூயி பாஸ்டியர் தெரிந்து கொண்டார். இரண்டு மூன்று முறைகள் வெறி நாயையும், நல்ல நாயையும் சோதித்து; தொடர்ந்து அந்த ஆய்வுக்கு வந்த வெற்றியாக அமைந்தது லூயியின் இந்த மூன்றாம் முறை முயற்சி.

நல்ல நாயை வெறி நாயாக்க முடியும் என்ற ஆய்வில் வெற்றி பெற்றுவிட்ட லூயி, வெறி நாயை நல்ல நாயாக்குவதற்கு என்ன மருந்து என்பதையும் கண்டுபிடிக்க முயன்றார்.

வெறி நாயின் மூளையையே மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்யத் துவங்கினார். ரேபியிஸ் நோயால் இறந்து போன ஒரு வெறி நாயின் மூளையை அறுத்து எடுத்தார்.