பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

171



அந்த நாட்டில் தோன்றிய அறிவியல் மேதை லூயி பாஸ்டியர்தான்; அந்த மூலக் கரானத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு கூறியவர் என்றால் - அது மிகையாகாது.

கண்ணுக்குத் தெரிகின்ற பகைவன் யார் என்று தெரிந்தால் அவனோடு போரிடலாம். பார்வைக்கே புலப்படாத பகைவனை எப்படிக் கண்டுபிடித்துப் போரிடுவது? இது மிக அரிய செயலல்லவா?

ஒரு வேளை அந்தப் பகைவன் கண்ணுக்குத் தெரிந்தாலும், அவனோடு போராடி வெற்றி பெறுவது மிக மிகச் சிரமமான பணிகளல்லவா?

இத்தகைய ஒரு போராட்டத்தில்; உலகில் முதன்முதல் போராடிய, செயற்கரிய செயலாற்றியவர் லூயி பாஸ்டியர் என்ற மனிதகுல மேதையாகும்.

லூயி பாஸ்டியர், பார்வைக்குத் தெரியாத நோய் எதிரிகளைக் கண்டு பிடித்தார். அந்த எதிரிகளை அழித்து ஒழித்தார். அதற்கான ஆராய்ச்சிகளை அல்லும்-பகலும் செய்து வழி வகைகளைக் கூறினார்.

யார் அந்த எதிரிகள்? நோய்களை மனித குலத்தில் உருவாக்கி மக்களை அழித்துக் கொண்டிருந்த அந்தப் பகைவர்கள் யார்? நோய்களை உருவாக்கும் நோய்க் கிருமிகளே என்பதை உலகுக்கு உணர்த்தினார் லூயி பாஸ்டியர்

இந்த நுண்ணியக் கிருமிகளைக் கடும் உழைப்பிற்குப் பிறகே அவர் அடையாளம் காட்டினார். அந்தக் கொடூரமான நோய்க் கிருமிகளிடமிருந்து மனித குலம் தப்பி பிழைப்பதற்கு - ஒரு புது மார்க்கம் கண்டார்.

அவர் அவ்வாறு நோய்க் கிருமிகளை கண்டுணர்ந்த பிறகு, மருத்துவத் துறையில் பெரும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாயின. அத்தகைய சான்றோர்தான் லூயி பாஸ்டியர்.

லூயி பாஸ்டியர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தார். அதற்கான கல்வி வளர்ச்சியை அரும்பாடு பட்டுக் கற்றார்.