பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

17



அதற்குப் பிறகுதான் டாவின்சி, இறந்தவர்களின் உடலை அறுத்து இதயத்தின் உண்மையான உருவத்தை டாவின்சி அறிந்து, உலகுக்கு இதுதான் இதயம் என்ற மனிதப் பகுதி என்பதை அறிவுறுத்தினார்.

இதயத்தின் வடிவில் மெல்லியதாக ஒரு கண்ணாடிக் கூட்டை உருவாக்கி, அதில் இளகிய மெழுகை உருக்கி ஊற்றி, ‘இதோ பாருங்கள், இதில் எங்கெல்லாம் மெழுகு போகின்றதோ. அதுதான் இதயத்தில் ரத்தம் செல்லும் பாதை என்று விளக்கியும் காட்டினார் - டாவின்சி.

உண்மை கூறியதால் : உயிரோடு எரிந்தார்!

ஓவிய மேதை டாவின்சிக்குப் பிறகு, மிகுவேல் செர்விட்டஸ் என்ற ஸ்பெயின் நாட்டு மருத்துவ விஞ்ஞானி. இதயத்தை மேலும் ஆராயும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், இந்த செர்விட்டஸ் என்பவர் ஓர் இறைமை ஆய்வாளார், மத ஆராய்ச்சிப் பாதிரியார்.

‘இதயத்தின் ஒரு பக்கத்தில் இருந்து, நுரையீரல் வழியாகத் தான் ரத்தம் மறுபக்கத்திற்குச் செல்கிறது. நுரையீரல்தான் காற்றுடன் கலந்து அது சிவப்பு நிறமாகின்றது; உயிர்ச் சத்தும் பெறுகிறது என்று கண்டுபிடித்துக் கூறியவர் இந்த இறைமை ஆய்வாளரான செர்விட்டஸ் என்ற வித்தகர்தான்.

அவர் இந்த விவரத்தைத் தான் எழுதிய கிறிஸ்துவம் மீட்க்கப்பட்டது (Christianity Restored) என்ற நூலில் இந்த விளக்கத்தைக் குறிப்பிட்டார்.

விஞ்ஞானி கேலன் முடிவுக்கு எதிர்ப்பா?

கேலன் என்ற மருத்துவ மேதையின் ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புக்கு எதிராக, விரோதமாக, செர்விட்டஸ் கண்டுபிடிப்பு இருந்ததால், அது மருத்துவ உலகில் ஒரு பெரும் விவாத சர்ச்சையை எழுப்பி விமரிசனத்துக்கு உட்பட்டு விட்டது.