பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மருத்துவ விஞ்ஞானிகள்


மனையின் அடியில் காலரா நோய் கண்டவர்கள், குஷ்டரோகிகள், ஏழை தரித்திரர்கள், வயதான்வர்கள் ஆகியோர் மரணமடைந்த பின்பு புதைக்கப்பட்ட சவங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமென்றும், மருத்துவமனை அருகே காய்ச்சல் நோய் மருத்துவ மனைகள் இருக்கின்றமையால் நச்சுக் காற்றுகள் தாக்கி நோயாளிகள் சாகின்றார்கள் என்றும் விசாரணையின் முடிவில் காரணங்கள் கூறப்பட்டன.

லிஸ்டர் ஓர் அதிர்ஷ்டக்காரர்!

விசாரணையின் முடிவைக் கண்ட அதிகாரிகளில் சிலர், ‘லிஸ்டர் செய்த அறுவைச் சிகிச்சை நோயாளிகள் இறக்க வில்லையே, ஏன்? அந்த நோயாளிகளும் இதே மருத்துவ மனையில்தானே அறுவை செய்து கொண்டு நடந்து சென்றார்கள். இதற்குக் காரணம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

அதற்கு அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? ஜோசப் லிஸ்டர் ஓர் அதிர்ஷ்டக்காரன் என்றார்கள் - மருத்துவர்கள்!

டாக்டர் லிஸ்டர் அதிர்ஷ்டக்காரன் என்றால் நோயாளிகள் பிழைத்துக் கொள்வர். ஆனால், நாங்கள் துரதிருஷ்டக்காரர்கள்; என்ன செய்வது? எல்லாவற்றையும் லிஸ்டரே அனுபவிக்கின்றான்; என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்!

ஆனால், ஜோசப் லிஸ்டர் அதற்குப் பதில் என்ன சொன்னார் தெரியுமா? ‘நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆண்டி செப்டிக் சர்ஜரி முறையைக் கண்டுபிடித்தேன். அந்த நச்சுத் தடை அறுவைதான் எனது நோயாளிகள் உயிர்களைக் காப்பாறியது’ என்று விளக்கிக் கூறினார்.

ஜோசப் லிஸ்டர் கூறியதை எந்த மருத்துவர்களும் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை; அலட்சியம் செய்தார்கள். உண்மை ஒரு நாள் வெளி உலகுக்குத் தெரியத்தானே வேண்டும்?