பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

73



மருத்துவ ஆராய்ச்சியில் ஆஸ்லர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, நோயாளிகள் அவரிடம் சிகிச்சைக்காக வந்தால், அவர் உடனடியாக அவர்களைக் கவனிப்பதும் இல்லை. அதனால் சலிப்படைந்த நோயாளிகள் சிகிச்சைக்காக ஆஸ்லரிடம் வருவதில்லை. இந்த மாதிரியான சம்பவங்களால் அவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் வேறு மருத்துவகளிடம் சென்றுவிடும் காரணத்தால், அவருக்குரிய பண வருவாயும் குறைந்து விட்டது.

ஒருவனுக்கு வந்துள்ள நோய்கள், அதன் தன்மைகள், நோய் ஏன் வந்தது? என்ன காரணம்? அதைத் தடுக்க முதல் வழி என்ன? மருந்துகள் என்னென்ன? தடுப்பு முறைகள் எவை யெவை? அதற்கான உணவு முறைகள் யாவை? என்பவற்றை எல்லாம் நோயாளிகளின் உடல்களிலே உள்ள நோயைக் கொண்டே ஆஸ்லர் ஆய்ந்து அறிவார்.

அதே போலவே, இறந்தவனின் உடலை எடுத்து, உடலின் திசுக்களை நுண்பெருக்கிக் கண்ணாடி மூலம் ஆராய்ச்சி செய்வார். உடல் இறப்பது ஏன்? இறப்பு உண்டாவது எப்படி? என்றும் அறிவதற்காக ஆராய்ச்சியில் தன்னையும் மறந்து ஈடுபடுவார்.

இந்த ஆய்வில் ஊனை மறப்பார்; உறக்கத்தை இழப்பார்; எதையும் பொருட்படுத்தாமல் அதே சிந்தனையிலேயே சிலை போலாகி விடுவார்.

ஆஸ்லர் குறும்புக்காரர்தான், வம்படி வழக்காடுபவர்தான், எதிலும் சுறுசுறுப்பும் பரபரப்பும் கொண்ட சுபாவிதான். என்றாலும், ஆராய்ச்சியிலே ஆஸ்லர் ஈடுபட்டால், அவர் பொறுமை பூமிக்குக்கூட இருக்காது! அவ்வளவு பொறுப்புடைய பொறுமையாளராக ஆராய்ச்சி செய்பவர் அவர்.

அதனால்தான், டைபாய்டு, ஜூரம், காலரா எனப்படும் வாந்திபேதி, இதயம் சம்பந்தப்பட்ட வலிகள், நோய்கள் அதன் கொடுமைகள், தடுப்பதற்கான மருந்துகள், தடுப்பு மருத்துவ முறைகள் ஆகியவற்றை எல்லாம் வில்லியம் ஆஸ்லர் கண்டுபிடித்து வெற்றி பெற்றார்!