பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மருத்துவ விஞ்ஞானிகள்


முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களும் ஆவர்; ரோசுடன் பிறந்தவர்கள் பத்துபேர், அவர்களுள் இவர்தான் மூத்தவர்.

இந்தியாவில் பிறந்தவர் ரோஸ் என்பதால், அவர் குழந்தைப் பருவத்தில் இந்தியாவிலேயே வளர்ந்தார். அதற்குக் காரணம், அவரது தந்தையார் இந்தியாவில் ராணுவ தளபதியாகப் பணியாற்றியதுதான்.

பள்ளியில் சேர்க்கும் வயது வந்ததும்; ரோஸ் இங்கிலாந்துக்குச் சென்று இலண்டனில் உள்ள ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டுக் கல்வி கற்றார்.

ரோசை ஒரு புகழ்பெற்ற மருத்துவராக்க வேண்டும் என்று அவர் தந்தை கருதினார். ஆனால், ரோஸ் மருத்துவப் படிப்பில் நாட்டமற்றவராகவே கல்வி பயின்று வந்தார்.

ரோஸ் ஓர் இலக்கியப் பிரியர், கவிதை, கதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவராகத் திகழ்ந்து வந்தார். தந்தை படைத் தளபதி அல்லவா? அவர் மூத்த மகன் விவகாரத்தில் சற்றுக் கண்டிப்பானவராகவே இருந்தார். அதனால், தனது தந்தையின் கண்டிப்புக்கு அஞ்சி மருத்துவர் கல்வியையே அவர் பயின்று வந்தார்.

இலண்டனில் உள்ள செயிண்ட் பார்தலோ மியஸ் கல்லூரியில் 1874-ஆம் ஆண்டு மருத்துவ மாணவனாகச் சேர்ந்தார். காரணம், தந்தையின் கண்டிப்பான கல்வி முறைதான். இருந்தாலும், தந்தையார் எண்ணத்தைத் தட்டமுடியாமல், அவர் மருத்துவ மாணவராகப் படித்து வந்தார். மருத்துவர் பட்டமும் பெற்றுவிட்டார்.

ரோஸின் சிந்தனைகள்

மருத்துவக் கல்வியில் விருப்பமற்றவராக ரோஸ் இருந்தது போலவே, அவர் மருத்துவராகவும் பணியாற்றிட விருப்பம் அற்றவராகவே விளங்கினார்.

தந்தையின் கண்டிப்புக்கேற்ப, ரோஸ் 1881-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து சேர்ந்தார்; மருத்துவராகவும் பணியாற்றினார்.