பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

85


மருத்துவத் தொழிலில் பற்றற்று இருந்த ரோஸ், எப்போதும், எதையாவது ஒன்றை எண்ணியபடியே இருந்தார். இருந்தாலும்; வேலையின்றி வீண்பொழுதைக் கழிக்கமாட்டார். அலைபாய்ந்த எண்ணத்தோடு நேரத்துக்கொரு பணியைச் செய்து கொண்டே இருப்பார். மருத்துவத் துறையும் அதற்கேற்றார் போலவே அமைந்திருந்தது.

இளம் வயதில் கவிதை, கதை கட்டுரைகளை எழுதிப் பழக்கப்பட்டிருந்த ரோஸ், அப்போது அதே சிந்தனையில் கவிதை, சங்கீதம், கதை, கட்டுரைகளை எழுதுவதிலே தனது ஒய்வுக் காலத்தைச் செலவிட்டார்.

பிரெஞ்சு, ரோமன், இத்தாலி, ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். தனக்குரிய சங்கீதக் கலையையும் கற்றார். ரோஸ் போகும் இடங்களுக்கு எல்லாம் பியானோ சங்கீதக் கருவியையும், இலக்கிய நூல் வகைகளையும் எடுத்துக் கொண்டே போவார்.

மனப் பயிற்சியில் பெற்ற அநுபவம் போலவே, உடற் பயிற்சியிலும் மனதைச் செலுத்திச் சிறப்புப் பெற்றார் ரோஸ். பொழுது போக்குக்காக, போலோ, டென்னிஸ் விளையாட்டுக் களை விளையாடுவார். மீன் பிடிக்கும் தொழிலில் விருப்பம் உடையவரானார்.

இவ்வாறு தனக்கு விருப்பப்பட்ட கலைகளிலே எல்லாம் ரோஸ் கவனம் செலுத்தி வந்ததால், அவருக்கு மருத்துவத் தொழில் வேலைகள் அதிகரித்தன. இதைப் பற்றி அவர் கூறும்போது, “நான் இனிமேல் வேலை செய்ய முடியாது. ஏனென்றால், குதிரைகள் சேணம் கட்டி பல நாட்கள் ஆயின” என்றார். ‘நான் புத்தகங்களைப் படிக்க முடியாதவனாக இருக்கின்றனே’ என்றும் கவலை அடைந்தார்.

இவற்றை எல்லாம் நாம் பார்க்கும்போது, ரோசுக்கு மொழித் துறையிலேதான் அதிக விருப்பமும் - அக்கறையும் இருந்ததாகத் தெரிகிறது. மருத்துவத்தை இரண்டாம் துறையாகத்தான் எண்ணி தொழில் செய்யலானார்.