பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மருமக்கள்வழி மான்மியம்

அற்பமும் ஆசை எனக்கிலை; அன்றியும்,
உருவமோ நீளமோ உயரமோ கண்டே
மூட உலகம் மோசம் போகும்;
ஆதலால் ஒருவரும் அறியா திருந்து இந் 260
நாலுகை யானை[1] நடத்து கின்றேன்'
என்று தன் முதுகி லிருக்கும் ஈயொன்று
எண்ணாது டம்பம் எடுத்துரைப்பது போல்,
'இரவும் பகலும் இடைவிடாமல்
பற்பல வருஷம் படித்து பீ. எல்., 265
எம். எல். பட்டம் எல்லாம் பெற்று
வந்திடும் பெரிய வக்கீல் மாரும்,
யாங்க வில்லையேல் என்செய்வார்?' எனப்
புத்தி யிலாது புலம்பித் திரியும்
குமாஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக் 270
குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
கோர்ட்டில் சென்று குத்திட வேண்டாம்
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
'இன்ன படியென்று எழுதி விட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன். 275
விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்;
வருகிற வழியாய் வந்து எனைக் கண்டால்
சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்
தருவேன்' என்று சற்றும் வாய்கூசாது
உரைக்கும் அந்த உத்தம புருஷன் 280


  1. 261. நாலுகை - அக்கீல் கோர்ட்டில் அணியும் கறுப்புக் 'கவுன்' நாலுகையுடைய சட்டை என்று ஏளனமாகச் சொல்வது வழக்கம். நாலுகை யானை என்பது வக்கில். வக்கீலாகிய யானையைத் தான் நடத்திச் செல்வதாகக் குமஸ்தா கூறிக் கொள்கிறான்.