பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/248

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

232

மொஹெஞ்சொ - தரோ


இங்கனம் இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர்கள் உயரமான வர்கள்; ஒருவகை வெண்ணிறத்தார்; நீண்ட மூக்குடையர் குதிரை ஏற்றத்தில் வல்லவர்; இரும்பைப் பயன்படுத்தியவர் போருக்குரிய உயர்தரப்படைக்கலன்களைக் கொண்டவர் எரிவளர்த்துவேள்வி செய்தவர்கள்; இந்து-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள்; இந்திரன், வருணன் முதலிய தேவர்களை வழிபட்டவர்கள் உருவ வழிபாட்டை அறவே வெறுத்தவர்கள்; லிங்க வழிபாட்டை அறியாதவர்கள்.

ஆரியர் பஞ்சாப் மண்டலத்தில் தங்கியிருந்தபோதுதான்ரிக் வேதத்தின் பெரும் பகுதியைச் செய்தனராதல் வேண்டும். ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள இடங்களின் பெயர்களை நோக்க, ரிக்வேத ஆரியர்கள் - ஆப்கானிஸ்தானம், பஞ்சாப், காஷ்மீர், சிந்துவில் சில இடங்கள், இராஜபுதனத்தின் சில பகுதிகள், கங்கையாற்றின் மேற்கிடம் இவற்றையே அறிந்திருந்தனராதல் வேண்டும். கி.மு.1500க்கு பிற்பட்ட காலத்திற்றான் அவர்கள் கங்கைச் சமவெளியிற் புகலாயினர்.

ஆரியர் அல்லாதவர் (அநாரியர்)

பஞ்சாப் மண்டிலத்திற் குடிபுகுந்த ஆரியர், தமக்கு முன் அங்கு இருந்த மக்களைப்பற்றிப் பகைமை பாராட்டிக் கூறியிருக்கும் பல குறிப்புகளும் அவர்களோடு செய்த போர்களும் ரிக்வேதத்தில் அழகாகக் குறிக்கப்பட்டுள்ளன. அதாரியரான மக்கள் ‘தாசர், தாஸ்யு’ எனப்பட்டனர். ‘அநாரியர் தட்டை மூக்கினர் கருநிறத்தார்; மாறுபட்டவழிபாடு உடையவர் விநோத மொழியினர்; சிறந்த செல்வம் பெருக்குடன் வாழ்பவர்; கோட்டை களையுடைய நகரங்களில் வாழ்பவர்; போரில் பேரோசை இடுபவர்’ என்றெல்லாம் ரிக்வேதம் கூறுகின்றது. ரிக்வேதம் ‘பனிக், வனிக்’ என்று சிலரைக் குறிப்பிட்டுள்ளது. அவர்கள் தாசர் ஒநாய் போன்ற பேராசை உடையவர்; சுயநலமே உருக்கொண்டவர்;


1. Ibid. pp. 66,67.