பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

13

காப்பிக் கிளாசுகளையும் தன் கையில் வாங்கிக் கொண்டு பின் புறமாகவே கதவைத் தள்ளிக்கொண்டு நுழைகிறாள். மாமா அடுக்குத் தொடர் கதையில் ஒன்றைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் விருவிரென்று குறுஞ் சுவருக்குப் பின் புகுந்து காப்பியைத் தன் டம்ளர்களில் கொட்டிக் கொண்டு, ஒட்டல் பையனிடம் அந்த டம்ளர் களைக் கொடுத்து அனுப்புகிறாள். ஜாங்கிரி புதிதல்ல. ஒன்றில் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்டுக்கொள்கிறாள். மிக்ஸ்சருக்குப் பதிலாகப் பகோடா வாங்கியிருக்கலாமோ? ஆனால் ஏகாதசி அமாவாசை ஏதேனுமாக இருந்தால் மாமா வெங்காயம் சாப்பிடமாட்டார். கொண்டு வைக்கத் தட்டு இல்லை. சோற்று வட்டையில் மூடும் அலுமினியத் தட்டில் அவற்றை வைத்துக் கொண்டு வருகிறாள்.

“அடேடே, என்னத்துக்கம்மா இதெல்லாம், நீயே ஓட்டல்ல வாங்கிண்டு.”

“பரவாயில்ல மாமா, பாலுக்குப் போனேன். கறக்கிறவ னில்லையாம். அப்படியே நாலெட்டு போய் வாங்கி வந்திட்டேன். முத முதல்ல நீங்க வந்திருக்கேள் மாமா.”

“அசடு, இப்ப எதுக்கு, கண்கலங்கறே? முதல்ல அப்படித் தான் இருக்கும். பின்னே தானே வந்து சொந்தம் கொண்டாடறாளா இல்லையா, பாரு! இவாளைவிட, அக்னி ஹோத்ரம் பண்ணினவா குடும்பங்களிலெல்லாம் பிள்ளைகள் சீமையில் போய் எந்தக் கழிசடையையேனும் சம்பந்தம் பண்ணிண்டு வந்து, சொத்துக் கிடையாது, பத்துக் கிடையா துன்னு குதிச்சவாள்ளாம் இப்ப கொஞ்சிக் குலாவறா. அந்தக் கருமம், பொண்ணாப் பிறந்தது, சமையலுள்ள வந்து சிகரெட்டை ஊதறது. இவா விழுந்து விழுந்து உபசாரம் பண்றா...!”

“உங்க பண்ணை வீட்டிலா, மாமா ?”

“எல்லாம் இந்தக் கண்ணால எத்தனையோ பார்த்தாச்சு. பிராமண ஜாதியிலே பிராமணத்துவம் எங்கே இருக்கு? பணத்துக்காக எல்லா ஆசாரத்தையும் விட்டவாதான் அதிகம். நீ எதுக்கு அழறே, அசடு?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/15&oldid=1115310" இலிருந்து மீள்விக்கப்பட்டது