பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

261

“உங்கள் யோசனையை நான் மறுக்கவில்லை அக்கா. ஆனால் கல்யாணமென்று வேறு யாரையும் ஒப்புக் கொள்ளுவது எனக்கு ஒப்புக் கொள்ளக் கூடியதாக இப்போதைக்குப் படவில்லை..”

“உன் மனசுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடிய தொன்றையும் நான் ஒரு நாளும் வற்புறுத்த மாட்டேன். நீ சுதந்திரமாகச் சிந்தனை செய்து முடிவுக்கு வர வேண்டும். உனக்கு யோசனைதான் நான் சொல்கிறேன்...”

மறுநாள் காலையில் ஞானம் அலுவலகத்துக்குச் சென்ற பின்னரே, மைத்ரேயி மெதுவாக வெளிக் கிளம்புகிறாள். ராமசேஷன் வீட்டில்தான் சாவி கொடுப்பது வழக்கம். வாயிலில் கால் வைக்கும் போதே தயக்கமாக இருக்கிறது. முன்னறைச் சாய்வு நாற்காலியில் இருந்த முரளி அவளைக் கண்டதும் எழுந்திருக்கிறான்.

“...ஒன்றுமில்லை, சாவி...”

அவள் வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வெளியே வந்து சாவியை வாங்கிக் கொள்ளு முன் மிக மெதுவான குரலில், “...உங்களோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன். எப்போது செளகரியப்படும்?” என்று கேட்கிறான்.

ஓர் கணம் வெளிக்குப் புலப்படாத பரபரப்பு அவளை ஆட்கொள்கிறது.

“என்னோடா?”

“ஆமாம். உங்களுக்கு இன்று மாலையில் வசதி இருக்குமானால் சொல்லுங்கள்...”

எங்கேனும் மாலையில் சந்தித்து விட்டு, இருட்டிய பிறகு திரும்புவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“நீங்கள், இப்போதே என்னுடன் வந்து பேசலாமே? நான் லைப்ரரிக்குத்தான் போகிறேன்...”

மூடி மறைத்த சல்லாத் துணிக்கப்பாலுள்ள வெளிச்சம் புலப்படுவது போல் அவளுக்கு அவன் எதைப் பற்றிப் பேசுவான் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/263&oldid=1509829" இலிருந்து மீள்விக்கப்பட்டது