பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

27

சுவைத்தாற் போலில்லை. கொடங்குப் பள்ளத்தின் மேல் பரப்பி வைத்த வாழையும் கரும்புமாக இருக்கின்றன.

ஒரு வாரம் அவன் கைவிரல் மோதிரத்தை விற்று இன்பம் கொண்டாடியபின், இந்த மூலை வீட்டை யார் வகையிலோ தேடிப் பிடித்தான்.

“கஞ்சியும் கூழும்கூட நீங்க இருக்கிற இடத்தில எனக்கு சொர்க்கம்” என்றாள், அவள் அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு. அவனும் பிளேயர்ஸ் ஸிகரெட்டிலிருந்து பீடிக்கும் டீக்கடைப் புரைக்கும் சரிந்தான். பிறகு நாள் தோறும் சென்னைப் படவுலகை நாடிப் போவதாகச் சொல்லிப் பஸ் ஏறிச் சென்றான்.

அவள் காத்துக் காத்து கண் பூத்தபின், சோர்ந்த முகத்தோடு வந்தான். மூன்று மாச கால வாழ்வில் ஒரு வாரம் தேனிலவு. பிறகு அடித்தளத்திலும் அடித்தளம். யார் யாரோ சிநேகிதர்கள் கடன் கொடுத்ததாகச் சொல்லித்தான் நாட்கள் கழிகின்றன. வறுமையும் பசியும் வயிற்றைக் கிண்ட மனித உறவின் ஈரங்களெல்லாம் வற்றிக் குழி பறிக்கையில் தனிமையில் அழுகையும் வருவதில்லை.

ஒருநாள் அவன், “எனக்குண்ணு சோறு வச்சிருக்கியா? வாணாங்கண்ணு, நீ துண்ணுக்க, ஒசந்தகொலத்துப் பொண்ணு, பட்னி கிடக்கிறியே?” என்று கொஞ்சிக் கொண்டு அருகில் வந்தபோது அவளுக்குப் பகீரென்றது.

ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? குழற்கற்றை நெற்றியில் ஆட அவன் அருகே பேச வருகையில் நாக்கு ஏன் குழறுகிறது? வேர்த்துக் கொட்டுகிறது?

உண்ட சோறு செரிக்காமல் குடலை விட்டு வெளி வருகையில் நாம் ருசித்துத் தின்ற பொருள்களா இவை? என்ற அருவருப்பு உண்டானாற் போலிருக்கிறது.

“ஐயோ ஏங்க, குடிச்சுட்டா வந்திருக்கீங்க...!” என்று அடி வயிற்று நா எக்கிக்கொண்டு மேலண்ணத்தில் ஒட்ட, கதறவும் முடியாமல் கண்ணீர் விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/29&oldid=1099702" இலிருந்து மீள்விக்கப்பட்டது