பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ரோஜா இதழ்கள்

“எங்கேங்க? உங்களுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கா?” என்று காதோடு அவள் கேட்கிறாள்.

“பின்னே? ‘ஊட்டிக்குப் போகிறோம்’ படத்தில் நாலு பாட்டு. ஆயிரத்துக்கு, நானூறு அட்வான்ஸ் கையிலே” என்று உரக்கச் சொல்லிவிட்டு, “அண்ணாச்சி, இப்படி வாங்க” என்று அவரை உள்ளே அழைக்கிறான்.

“இவருதான் கண்ணபிரான்னு சொல்லுவேனே, அவர். என் குரு, அண்ணன், மாமன், எல்லாம் இவருதான். இதாங்க மைத்தி...” என்று சொல்லிவிட்டு “விழுந்து கும்பிடு” என்று ஜாடை செய்கிறான். முற்றத்தில் வந்து நிற்கும் அவர், “என்னப்பா இதெல்லாம், அது ஒசந்த குலத்துப் பொண்ணு... இங்கிதம் புரியாமல் விழுந்து கும்பிடுங்கிறியே?” என்று சிரிக்கிறார்.

சுருக்கென்று ஊசி தைத்தாலும் விழுந்து பணிகிறாள். பரபரவென்று துணிகளை மடித்து, ஒன்றிரண்டு தட்டு முட்டுக்களைக் கோணியில் போட்டுக் கட்டும்போது, அள்ளிச் சாப்பிட்டு மூச்சுத் திணறுவது போலிருக்கிறது.

சிந்தனைக்கு நேரமில்லை. பாய்களைக் கட்டி வண்டியில் போடுகிறான். பெட்டியைப் பூட்டி டிக்கியில் வைக்கிறான். அந்தக் கோணிச் சாமான்களை இந்திரா கபேக்காரரிடம் இறக்கிவிட வேண்டும்.

கண்ணபிரான் வண்டியோட்டிக்கு அருகில் அமர்ந்து கொள்கிறார். அவர்கள் இருவரும் பின்னே அமருகின்றனர். வண்டி ஒலியைப் பாய்ச்சிக் கொண்டு நகருகிறது.


3

ழியில் எந்த ஊரென்று அவளுக்குத் தெரியவில்லை. இரவு ஒன்பது மணிதான். ஓட்டல் வாயிலில் வண்டி நின்றிருக்கின்றது. கண்ணபிரானைப் பார்ப்பதற்கு அவ்வளவாக அவளுக்குப் பிடிக்கவில்லை. எனினும் கார் கதவின் வாயிலில் நின்று, “வாம்மா, போய்ச் சாப்பிடலாம்..” என்று அழைக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/34&oldid=1101040" இலிருந்து மீள்விக்கப்பட்டது