பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ரோஜா இதழ்கள்

சொல்லமாட்டார்களா? அங்கே அவள் முன் சென்று காலடியில் விழுவது போலும், அவள் உடனே தட்டிக் கொடுத்து ஆறுதலும் தேறுதலும் கூறி விடுதியில் சேர்த்துக் கொள்வது போலும், தான் கல்லூரி மாணவியாய்ப் புகழுடன் முன்னேறி...

“என்ன ஐயரம்மா, நீ. உங்கிட்டப்போயி பொய் சொல்லி எனக்கு இன்னா லாபம்!” என்ற குரல் அவளுடைய பகற்கனவைக் கலைக்கிறது. மதுரம் மாமி ஒரு பையும் கையுமாக உள்ளே வருகிறாள்.

வெய்யிலில் வந்திருக்கிறாள் என்று நோக்கும்போதே புலனாகிறது. கைப்பையை மூலையில் சாத்திவிட்டுத் தாழ் வாரத்துப் பக்கம் செல்கிறாள். கதவடியில் வந்து, “அப்பாவு, டீக்கடைக்காரரிடம் கேட்டு ஒரு கிளாசு வாங்கிட்டுவாயேன்? நீ சூப்பிக்குடிப்பியேன்னு ஒரு கிளாசு வாங்கிவச்சால் அதை இந்த வானரப்படைகள் போட்டு உடச்சிடறது. டீ சொர்ணம், கடாமாடு போல என்னடீ படுக்கை? பீடை! எழுந்திரு! வழில படுத்துண்டுட்டா!” என்று கத்துகிறாள்.

அப்பாவு என்று அவள் கூப்பிட்ட ஆள், இளைஞன்தான், உள்ளே வந்து தாழ்வாரத்துக்குப் போகிறான்.

“அது யாரு ஐயிரம்மா?” என்று அவன் கேட்கும் குரல் அவள் செவிகளில் விழுகிறது.

“சொந்தக்காரப் பொண்ணு. டீச்சர் வேலைக்குச் சேர்ந்து படிக்கணும்னு பட்டணம் போக வந்திருக்கு.”

“இன்னிக்கு சாம்பாரு ரொம்ப நெல்லா இருக்கு ஐயிரம்மா, இன்னும் கொஞ்சம் போடு...”

மைத்ரேயி, மதுரம் சோற்று விடுதியும் நடத்துகிறாளோ என்று மலைக்கிறாள்.

“திரும்ப என்னிக்கு வருவே?”

“அடுத்த ட்ரிப் கள்ளிக்கோட்டை போகுது ஐயிரம்மா லாரி. ரெண்டுவாரம் கழிச்சுத்தான் இந்தப் பக்கம் வருவேன். ராதா அண்ணன் டிராமா இருக்குது, நம்ம குப்பத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/86&oldid=1101926" இலிருந்து மீள்விக்கப்பட்டது