பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

91

யில் சோளி அணிந்திருக்கிறாள். கூந்தலை இழை பிரியாமல் வாரி, பின்புறம் வடைபோல் கொண்டை போட்டு வளைவாக மல்லிகைச்சரம் சுற்றி இருக்கிறாள். அவளுடைய பாசமணிச் சரத்தின் பட்டுநூல்குஞ்சம், சோளிக்குக் கீழ் வெற்று முதுகில் வந்து வடிந்திருக்கிறது.

“ஏண்டி கோகிலா எப்படி இருக்கே, சௌக்கியமா?” என்று மதுரம் மாமி விசாரிக்கையில் அவள் திரும்பிப் பார்த்துப் பற்கள் தெரியச் சிரிக்கிறாள். பற்களின் வெண்மை அவளுடைய கறுத்தமேனிக்கு மிக எடுப்பாகப் பளீரென்று தெரிகிறது.

“அட, மதுரத்தம்மாளா? ஊருக்குப் போனது போக நூறு வயிசு போ. இப்பத்தான் அம்மா சொல்லிட்டு உள்ளாற போச்சு. இந்த மதுரம் எங்க இருக்காளோ தெரியலன்னு...”

“அடிப்பாவி இன்னும் நூறுவயசு எனக்கு ஏண்டி நீ ஆசீர்வாதம் பண்றே? அம்மாவுக்கு உடம்பொண்ணும் இல்லியே? வெங்கிட்டு ஐயர் சமையலுக்கு இருக்கிறாரா?”

“அவருதான் இல்லியே? கண்நோவு வந்து அவரைப் புள்ளியாண்டான் வந்து டில்லிக்கு இட்டுப் போயிட்டாரே? அப்புறம் யாரும் சரியில்ல. நேத்துக்குத்தான் ஒரு மீசைக்கார ஆளு வந்து, பீடியக் குடிச்சிக் குடிச்சி சமையல் ரூம்பெல்லாம் போட்டுட்டுப் போய்ச் சேர்ந்தாரு. ஒரு அம்மா வந்து நாலுநாள் இருந்திச்சி. நானூறு ரூவா ஜாமான் காணாமப் படுத்து ...”

“ஐயோ?”

“அத்தையேன் கேக்குறே போ, பாலாம்மா சமையல் பண்றேன்னு, கையிலே ஆவியடிச்சிக்கிட்டுக் கட்டுப் போட்டிருக்குது. ஓட்டல்லந்து எடுத்து வந்தா ஐயிரு சோறு துண்ண மாட்டாரு, பாவம். போ, போ... உள்ளாற...”

மதுரம் திரும்புமுன் வேலைக்காரி கோகிலம் மைத்ரேயியைப் பற்றிக் கேட்க மறந்ததை நினைத்துக் கொண்டாற் போல பார்க்கிறாள். இதற்குள் லோகாவே பின்புறம் வந்து கோகிலாவை அழைக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/93&oldid=1101944" இலிருந்து மீள்விக்கப்பட்டது