பக்கம்:வசந்த மல்லிகா.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

வஸந்தமல்லிகா

ஸகா : அவள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கக் கூடிய சாமர்த்தியமுள்ள மனிதன் ஒருவனிருக்கிறான். நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்! அவன் கண்டுபிடித்தால், நானே அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்.

வஸ : அவன் எங்கே இருக்கிறான்? அவனிடம் நானும் வருகிறேனே?

ஸகா : நீங்கள் அவனிடம் வருவது நன்றாக இராது. நானே போகிறேன் - என்று எழுந்தான்.

"சரி அப்படியானால் நானும் ஒரு பக்கமாக தேடிக்கொண்டு போகிறேன். நீரும் அந்த மனிதனுமாக அவளைக் கண்டுபிடியுங்கள்; நான் போகிறேன். இதோ இந்தப் பையில் ரூபா 100 இருக்கிறது. இதை ஏதாவது அவசரச் செலவுக்கு வைத்துக் கொள்ளும்” என்று சொல்லி பணப்பையைக் கொடுத்துவிட்டு வெளியில் போய் விட்டார் வஸந்தராவ்.

கிழவன் தனது வீட்டின் கதவை மறுபடியும் சாத்தித் தாளிட்டுக்கொண்டு, "பீமா! பீமா!" என்று கூப்பிட்டான். பீமன் புன்சிரிப்போடு அவனிடம் தோன்றி, "அவர் சொன்னதையெல்லாம் நானும் கேட்டேன்” என்றான்.

“என்ன ஆச்சரியம்! இவரோடு வந்தவள் எங்கே போயிருப்பாள்? வஸந்தராயரும் சரியான ஆசாமிதான். பரசுராம பாவாவைப்போல இவரும் ஸ்திரீலோலராயிருக்கிறாரே இவர் அவருக்குச் சரியான வார்சுதான். ஆனால் அந்தப் பெண் இவரை ஒரு க்ஷணத்தில் ஏமாற்றி விட்டாளே!" என்று கிழவன் அதிசயித்துக் கூறினான்.

“நீர் நினைக்கிறபடி ஜெமீந்தார் அவ்வளவு முட்டாளல்ல; சாமர்த்தியசாலிதான்" என்றான் பீமன்.

ஸகா : எப்படி சாமர்த்தியசாலி?

பீம : உமக்கு இதையறிந்துகொள்ளக் கூடிய புத்திக்கூர்மையில்லையே! நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஒரு பெருத்த ரகஸியத்தை ஜெமீந்தார் கண்டுபிடித்து விட்டாரே.

ஸகா : என்ன ரகஸியம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/102&oldid=1231397" இலிருந்து மீள்விக்கப்பட்டது