பக்கம்:வசந்த மல்லிகா.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழவனும் கூத்தியும்

89

அப்போது அஸ்தமான சமயம் ஆகிவிட்டது. மல்லிகா தனது சால்வை போனதை நினைத்துச் சிறிதும் வருந்தாமல், கிழக்கு முகமாக நடந்து சிறிது தூரம் சென்றாள். அங்கு ஆற்றின் குறுக்கில் ஒரு பாலமும் ராஜபாட்டையுமிருந்தன. அந்தப் பாட்டை தஞ்சையிலிருந்து, ஆற்றின் வடபுறமிருந்த கருத்தட்டாங்குடியென்னும் ஊருக்குப் போகும் வழி. அந்த வழியை மல்லிகா அடைந்து பாலத்தைக் கடந்து கருத்தட்டாங்குடிக்குள் வந்தாள். அப்போது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டதாகையால் எங்கும் இருள் சூழந்திருந்தது; கடைகளின் வெளிச்சத்தினாலும், ஆங்காங்கு காணப்பட்ட சர்க்கார் விளக்குகளின் ஒளியினாலும் பாதையையறிந்தவளாய் அவள் மேன்மேலும் நடந்து ஏதோ ஒரு தெருவிற்குள் வந்து சேர்ந்தாள். அப்போது இரவில் நெடு நேரமாகாதிருந்ததாயினும் வானத்தில் கருமேகம் அடர்ந்திருந்தமையால் அப்போது இரவு பத்து மணி சமயத்தைப் போல விருந்தது. அநேகமாய் எல்லா விடுகளிலும் ஜனங்கள் வாசற்கதவுகளை மூடிக்கொண்டு உள்ளே போய்விட்டனர். இரண்டொரு வீடுகளில் மாத்திரமே ஜன்னல்களின் வழியாக வெளிச்சம் வெளியில் தெரிந்தது. களைத்துத் தளர்ந்து சோர்வடைந்திருந்த மல்லிகா அதற்கு மேல் நடக்க வலுவற்றவளாய் உட்கார எண்ணங்கொண்டு ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தாள். அதன் வாசற்கதவு முக்காற்பாகம் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. உட்புறமிருந்து கூடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த வெளிச்சம் ஜன்னலின் வழியாக நன்றாய்த் தெரிந்தது. மல்லிகா அதன் வழியாக உட்புறத்தை நோக்கினாள். அங்கே தோன்றின பயங்கரமான காட்சியைக் கண்டு அவள் அஞ்சி நடுங்கித் தனது சிரத்தைப் பின்வாங்கினாள். கூடத்தில் விகார ரூபத்தோடு அமைக்கப்பட்ட பல முகங்கள் சுவரில் ஆணிகளில் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. அந்த முகங்கள் இராக்ஷஸ ரூபங்களாயும், முற்றிலும் பயங்கரமாயும், விரூபமாயும், கோர தந்தங்களைக் கொண்டவையாயும், நீண்ட நாவையும் சிறிய விழிகளையும் முறத்தைப் போன்ற செவிகளையும் உடையனவாயும் தோன்றி குலையை நடுக்குவித்தன. அவற்றைக் கண்ட மல்லிகா திகைத்து நடுங்கினாள். முன்னமே தளர்ந்து தள்ளாடிய நிலைமையில் இருந்தவள் ஆதலால் அவள் அந்த விகாரமான காட்சியைக் கண்டு சகிக்க மாட்டாதவளாய் அப்படியே மூர்ச்சித்துத் திண்ணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/107&oldid=1231408" இலிருந்து மீள்விக்கப்பட்டது