பக்கம்:வசந்த மல்லிகா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

வஸந்தமல்லிகா

அதைக் கேட்ட பீமராவ், "ஒ" வென்று கதறியழ ஆரம்பித்தான். அவனடைந்த பரிதாப நிலைமையைக் கண்ட சப் இன்ஸ்பெக்டர் இரக்கங்கொண்டு, "ஐயா மிஞ்சிப் போன காரியத்தைப் பற்றி வருந்துவதில் பயனென்ன? பிணத்தை அதி சீக்கிரம் புதைத்து விடுவார்கள். நீர் என்னோடு வாரும்; உம்மை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு போய்க் காட்டுகிறேன்" என்று சொல்லி ஒரு குதிரை வண்டியை வரவழைத்து, போர்வையுடன் வண்டியில் ஏறிக் கொண்டு பீமராவையும் உட்காரச் செய்தார். அரை நாழிகை நேரத்தில் வண்டி தஞ்சை மணிக்கூண்டிற்கு அருகிலிருக்கும் வைத்தியசாலையின் வாசலில் வந்து நின்றது. இருவரும் கிழே இறங்கி வைத்தியசாலைக்குட் போய் ஓர் சவத்தைக் கண்டார்கள். பீமராவ் துடிதுடித்தவனாய் அதை நோக்கி விரைவிலோடி அதன் முகத்தைத் திறந்து பார்த்தான். அது ஒரு ஸ்திரீயின் சவமாகக் காணப்பட்டதாயினும், அது இன்னாருடையதென்றே அடையாளம் கண்டுகொள்ளக்கூடாததாயிருந்தது. ஆனால், அது மல்லிகாவினுடையதல்லவென்து மாத்திரம் பீமராவுக்கு நன்றாகத் தெரிந்தது. தான் செய்ய நினைத்திருந்த தந்திரத்திற்கு அதுகூலமாயிருக்குமென்று நினைத்துக்கொண்ட பீமராவ், இறந்து போனவள் மல்லிகாவென்றே உறுதிப்படுத்திவிடத் தீர்மானித்துக் கொண்டான். அவன் அந்த முகத்தைப் பார்த்தவண்ணம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியழுது கண்ணிர் விட்டான். "ஐயோ! அடுத்த வாரத்தில் கலியாணம் நிச்சயித்திருந்தோமே! உன்னுடைய மணவோலை பிணவோலையானதோ பாவி, மோசம் செய்து விட்டாயே! எங்கள் வயிற்றிலெல்லாம் நெருப்பை மூட்டிவிட்டாயே!” என்று பலவாறு புலம்பினான். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் முதலியோர் கண்களில் நீர் ததும்பும் படி சோகரசம் காட்டி நாடகம் நடித்தவனாய், "ஐயா! இவளுடைய சால்வையை இவள் மேலேயே போட்டு நன்றாக மூடி விடுங்கள். நான் போய் எங்கள் மனிதரை அழைத்துக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லி நயந்து வேண்டினான்.

ஹை சாயப்பு, தமது கையிலிருந்த கான்பூர் சால்வையால் அந்தப் பிணத்தை நன்றாக மூட, பீமராவ் பொறுக்கக் கூடாத விசனக்குறியோடு வெளியில் வந்து தெற்கு ராஜவீதியை நோக்கி வேகமாய் ஓடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/120&oldid=1231947" இலிருந்து மீள்விக்கப்பட்டது