பக்கம்:வசந்த மல்லிகா.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15-வது அதிகாரம்

தளுக்கும் குலுக்கும்

ரண்டொரு வாரத்தில் மல்லிகா சித்திரவேலையில் மிகுந்த சாமர்த்தியசாலியாயினாள். கிருஷ்ணவேணியும், அவளது தந்தையும் ஒரு நாளில் எவ்வளவு வேலை செய்து முடித்தார்களோ, அதைக் காட்டிலும் மல்லிகா அதிகம் செய்ய ஆரம்பித்தாள். கிருஷ்ணவேணியும் அவளது தந்தையும் இயற்கையிலேயே நற்குணமும் பிறரிடத்தில் அன்பும் உள்ளவர்கள். மல்லிகாவின் அருமை பெருமைகளையும், நற்குண நல்லொழுக்கம், உழைப்புக் குணம், புத்தி நுட்பம், சிறந்த பேரழகு முதலியவற்றையுங்கான, அவர்களிருவரும், ஒவ்வொரு தினமும் பெருகிய அந்தரங்கமான அன்போடும், ஆசையோடும், மிகுந்த மதிப்போடும் அவளைப் பெரிதும் அன்போடு நடத்திக் கொண்டாடி வந்தனர். சிறிது நேரம் மல்லிகாவைக் காணாவிடில் அவர்களுக்குப் பொழுதே போவதில்லை. கிருஷ்ணவேணி அவளைத் தனது இளைய சகோதரிபோல அருமையாக மதித்துச் சீராட்டினாள். அவள் ஒத்திகைக்குப் போன போதெல்லாம் மல்லிகாவையும் தன்னுடன் கூடவே அழைத்துப் போவாள். அவள் அடிக்கடி விசனத்தில் ஆழ்ந்திருப்பதாய்க் காணப்படும்போதெல்லாம் கிருஷ்ணவேணி அவளை ஆதரத்துடன் தேற்றி அவளுக்கு ஆறுதல் கூறுவாள்.

அவள் அதிகமாக உழைத்ததைக் கண்டு பொறாமல் தந்தையும், மகளும் அவளை அடிக்கடி கடிந்து கொள்வார்கள். மல்லிகா அவர்களோடு இருந்த காலத்தில் தனது விசனத்தைப் பாராட்டாமல் அவர்களுடன் சந்தோஷமாக இருக்க முயலுவாள்; தனியாக இருந்த காலத்தில் அவளது மனதில் மறைந்து கிடந்த ஆறாத் துயரமானது அடக்கவொண்ணா உரத்தோடு பொங்கி எழுந்து அவளை மேற்கொள்ளும். புறத்தோற்றத்திற்கு மாத்திரம் அவளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/126&oldid=1232013" இலிருந்து மீள்விக்கப்பட்டது