பக்கம்:வசந்த மல்லிகா.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

வஸந்தமல்லிகா

கோவி : பெயரென்ன?

கிரு : ஸஞ்சலாட்சி.

கோவி : (சிறிது யோசனை செய்து) நாளைய தினம் நம்முடைய நாடகம் அவசியம் நடக்க வேண்டுமே. என்ன செய்கிறது? தமயந்திக்கு இப்படி ஆபத்து வந்துவிட்டதே! இவளுக்கு அந்த வேஷத்தைக் கொடுத்தால் நடிப்பாளா? - என்று பொதுவாகக் கேட்டார்.

கிரு : அவள் நிரம்பவும் கூர்மையான புத்தியுடையவள் தான். ஊர்வசியாக நடிக்கக் கூடியவளென்பதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமில்லை. அவ்வளவு சாமர்த்தியமுடையவளே! ஆனால், இவள் சம்மதிப்பாளோ மாட்டாளோ; அதுதான் சந்தேகம்.

கோவி : அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டியது உன் பொறுப்பு. நீதான் அவளைச் சரிப்படுத்த வேண்டும். இந்த உதவியை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன் - என்றார்.

அவர் அவ்வளவு தூரம் நயந்து சொல்வது நிரம்பவும் அருமையாதலால், கிருஷ்ணவேணி உடனே மல்லிகாவிடத்தில் ஆத்திரத்தோடு ஒடி வந்து, "மல்லிகா உன்னுடைய அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்லுவேன்! நீ ஊர்வசியாக நடிக்க வேண்டுமென்று வாத்தியார் கேட்டுக் கொள்ளுகிறார். நாங்களெல்லோரும் எவ்வளவோ காலம் ஆவலோடு எதிர்பார்க்கக் கூடிய அதிர்ஷ்டம் உனக்குத் தானாகவே வந்திருக்கிறது. மாட்டேனென்று சொல்லாமல் நீ எப்படியாவது சம்மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு அவசியம் நடக்க வேண்டிய நாடகம் நின்று போய் விடும் போலிருக்கிறது! இதனால் வாத்தியாருடைய தயவும் பிரியமும் நமக்குப் பூரணமாக ஏற்படும்" என்றாள்.

எதிர்பாராத அந்தச் செய்தியைக் கேட்ட மல்லிகா திடுக்கிட்டுத் திகைப்படைந்து மெளனமாக நின்றாள்.

கிரு : என்ன பிரமாதமாக யோசனை செய்கிறாயே? சரிதானென்று ஒப்புக் கொள்.

மல்லி : ஒப்புக் கொள்வது சுலபந்தான்; அது மாத்திரம் போதுமா? அது எல்லாவற்றிலும் முக்கியமான வேஷமல்லவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/130&oldid=1232117" இலிருந்து மீள்விக்கப்பட்டது