பக்கம்:வசந்த மல்லிகா.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

வஸந்தமல்லிகா

கிரு : விருந்து சாப்பிடுவது மாத்திரம் சுகப்படாது. தினம் பெட்டி வண்டியில் வர வேண்டும். ஆற்றங்கரையின் ஒரத்தில் இப்படி மெத்தை வீட்டில் இறங்கியிருந்து போஜனம் செய்ய வேண்டும்.

பீம : நீ சொல்வது சரிதான். ஆனால் சில மனிதரை சுவர்க்க போகம் நிறைந்த இடத்தில் வைத்தாலும் அவர்களுக்குச் சந்தோஷமே உண்டாவதில்லையே; அதற்குக் காரணமென்ன?

கிரு : பைத்தியம் பிடித்தவர்களை அடைக்கும் வைத்தியச் சாலைக்குத்தான் அவர்களை அனுப்ப வேண்டும்.

பீம : (புன்சிரிப்போடு) அப்படியானால் நம்முடைய ஸஞ்சலாட்சியை அங்கே அனுப்ப வேண்டுமென்று சொல்லுவாய் போலிருக்கிறதே! அதற்கு மேலே சொல்ல எனக்கு அச்சமாக இருக்கிறது.

கிரு : மனசில் நினைப்பதை மறைக்க வேண்டாம். சொல்லி விடும். இவள் என்ன கடித்தா முழுங்கி விடுவாள்? இவள் மனமும், குணமும் இவர் பார்க்கும் பார்வையைப்போல, அவ்வளவு கொடுமையானவையல்ல. தைரியமாகச் சொல்லும்.

பீம : (அன்போடு) ஸஞ்சலாட்சி! உன்னுடைய விருப்பம் எது? எப்படி இருப்பது ஸுகம்?

மல்லி : (மெதுவாக) உலகப் பற்றையெல்லாம் மறந்து, சும்மா இருப்பது ஸுகம்.

பீம : பேஷ்! சரியான சங்கதி! நாமெல்லோரும் எந்த விஷயத்தையும் மனதில் வைத்துப் பாராட்டுவதை இன்பமாக நினைக்கிறோம். ஸஞ்சலாட்சி எல்லாவற்றையும் மறப்பதே ஸுகமென்கிறாள். இதை நமக்கு வேறு யார் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?

கிரு : இந்த விருந்தை நான் ஒருநாளும் மறக்கமாட்டேன்.

பீம : இதை மறக்காமலிருக்க நீ அதிக சிரமப்பட வேண்டுவதில்லை. அதிசீக்கிரத்தில் இவ்விடத்தில் வேறொரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன். விருந்து ஒன்றன்மேல் ஒன்றாகக் கிடைத்தால், இந்த நினைவு உன் மனசை விட்டு ஒருநாளும் நீங்காது என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/146&oldid=1232197" இலிருந்து மீள்விக்கப்பட்டது