பக்கம்:வசந்த மல்லிகா.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமயந்தியும் வஸந்தராவும்

141

“சரி; நீ இதற்காக கிலேசப்பட வேண்டாம்; நான் இதைப் பற்றி இனி வாயால் பேசுகிறதில்லை . அதிருக்கட்டும்; ஒரு காரியம் செய். என் தலையணையின் கீழ் ஒரு திறவுகோலிருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போய், அதோ இருக்கும் மேஜையைத் திற. அதில் காகிதம் பேனா முதலியவை இருக்கின்றன. தஞ்சையிலிருக்கும் என்னுடைய சர்வாதிகாரிக்கு, நான் இவ்விடத்திலிருக்கிறேன் என்பதைப் பற்றி ஒரு கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்” என்றார்.

தமயந்தி "அப்படியே ஆகட்டும்" என்று கூறிய வண்ணம் அவரது தலையணைக்கு அடியில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு போய் மேஜையை அடைந்து, அவரது சொற்படி ஒரு கடிதம் எழுதி, தபாலுக்கு அனுப்பிவிட்டுத் திரும்பவும் திறவு கோலை முன் இருந்த இடத்தில் வைக்கும் பொருட்டு வந்து தலையணையை முன்னிலும் சிறிது அதிகமாகத் தூக்கினாள். அதன் கீழ், சற்றுத் தூரத்தில், ஒரு படம் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டாள். அதில் ஒரு ஸ்திரீ வடிவத்தின் பாதி உடம்பு அவளுக்குத் தெரிந்தது. அதை எடுத்துப் பார்க்க ஆவல் கொண்ட தமயந்தி அதை வெளியில் மெல்ல இழுத்துப் பார்த்துப் பெரிதும் வியப்படைந்தாள். அவரே படம் எழுதுவதில் கைதேர்ந்த நிபுணராதலால், அவர் மல்லிகாவை விட்டுப் பிரிந்த தமது ஞாபக சக்தியிலிருந்தே அவளை ஒரு படம் எழுதி வைத்துக் கொண்டு அதை அடிக்கடி பார்த்து ஆறுதலடைவதும், பிறகு அதைத் தலையணையின் கீழ் வைப்பதுமாய் இருந்தார். தமயந்தி அந்தப் படத்தை உற்று நோக்கிய பிறகு முன் இருந்த இடத்தில் அதை வைத்து விட்டு, "நீங்கள் மல்லிகா! மல்லிகா! என்று தூக்கத்தில் பிதற்றினீர்களே! இந்தப் படத்தில் இருப்பவர் தான் அந்த மல்லிகாவோ?” என்று நயமாகக் கேட்டாள்.

வஸ : ஆம்; இவள்தான்! நான் அப்படியா பிதற்றினேன்?

தம : ஆம்; அநேகம் தடவை பிதற்றினீர்கள். தங்களை வஞ்சித்தவள் இவள்தானே? தங்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவளும் இவள்தானே?" என்றாள். அதைக் கேட்டவுடன் அவருக்குப் பெருத்த ஆத்திரம் உண்டாயிற்று. "இவள் என்னை வஞ்சிப்பதாவது? அப்படி உன்னிடத்தில் யார் சொன்னது?” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/159&oldid=1233815" இலிருந்து மீள்விக்கப்பட்டது