பக்கம்:வசந்த மல்லிகா.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19-வது அதிகாரம்

மல்லிகாவின் புதிய கணவன்

குறவன் பறவைகளைப் பிடிப்பதற்கு வலை விரிப்பதைப் போல் பீமராவ் தனது வஞ்சக வலையை விரித்து அதில் மல்லிகாவை வீழ்த்த மிகவும் பொறுமையாகவும், தந்திரமாகவும் விடா முயற்சி செய்து வந்தான். அவன் தன்னைப் பிடிக்கும் பொருட்டு வலை விரிக்கிறான் என்பதை மல்லிகா உணர்ந்தாள். ஆகிலும் அவள் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வல்லமையற்றவளாய் இருந்தாள். திருவையாற்றில் அவன் தனது மனதை வெளியிட்ட போதே அவள் அவனது சிநேகத்தை விலக்கியிருக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல் அலட்சியமாக இருந்ததனால், அவள் அவனை அதன் பிறகு கண்டித்து விலக்கக் கூடாமல் போயிற்று. ஆனால், அவன் அதன் பின்னர் அவளிடம் வந்த போதெல்லாம், சாதாரணமான சிநேகிதனைப் போல வந்து கொண்டிருந்தானே அன்றி, திருவையாற்றில் நடந்த விஷயத்தை அவளுக்கு நினைவூட்டக் கூடிய வார்த்தை ஒன்றையும் சொல்லாமல் நிரம்பவும் தந்திரமாக அவன் நடந்து கொண்டான். அவனது உண்மையான மனநிலைமை எப்படிப்பட்டதென்பதை அவள் நன்றாக அறிவாள். அவள் கடின மனதுடையவள் அல்ல. ஆனால், அவளது காதல் முழுவதையும் வஸந்தராவ் கவர்ந்து சென்றமையால், அவளுக்கு வேறு எந்தப் புருஷர் மீதும் விருப்ப முண்டாகவில்லை. என்றாலும், பீமராவ் சலியா மனத்தோடு, கடுமுயற்சி செய்து, அவளிடம் மிகுந்த அன்பையும் மரியாதையையும் காட்டி வந்தான். அவன் அவ்விதம் செய்து வந்தது, அவளது மனதில் சிறிது சிறிதாகப் பதிந்து கொண்டே வந்தது.

அரண்மனையிலோ நாடகம் நடைபெற்று வந்தது. அதில் மல்லிகா முக்கியமான ஸ்திரீ வேஷக்காரியாக ஒவ்வொரு நாளும் வந்து நடித்து மிகுந்த புகழ் பெற்றனள். அவளது கீர்த்தி நாலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/162&oldid=1233825" இலிருந்து மீள்விக்கப்பட்டது