பக்கம்:வசந்த மல்லிகா.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

வஸந்தமல்லிகா

கூடாமல் பலர் தத்தளித்தனர். கொட்டகையின் சிறிய வாசல் வழியாக அத்தனை ஜனங்களும் ஒருவர் பின் ஒருவராய் ஒழுங்காகப் போதலே நெருக்கமாகவும், உபத்திரவமாகவும் இருக்குமென்றால், எல்லோரும் ஒரே காலத்தில் வெளியில் போக நினைத்து விரைவாக ஓடி அழுத்தினால், அப்போது உண்டாகும் குழப்பத்தையும், நாசத்தையும் மனதால் பாவிக்க வேண்டுமே அன்றி வாயால் விவரிப்பது பலியா முயற்சியாகும்.

இரண்டொரு நிமிஷத்தில் படுதாக்களில் எல்லாம் நெருப்புப் பிடித்துக் கொள்ள, நாடக மேடை முழுவதும் நெருப்பும் புகையும் சூழ்ந்து கொண்டன. மேடையிலிருந்த யாவரும் அவ்விடத்தை விட்டு வெளியில் ஓடிப் போயினர். தூங்கிக் கொண்டிருந்தவன் போல படுத்திருந்த சதாரத்தின் புருஷனாகிய அரசனும், திருடனும், மற்றவரும் தம்மை மறந்து, கோவிந்தசாமி ராவுக்குப் பயப்படாமல் தத்தம் வேஷத்துடன் வெளியில் ஓடினர். அவ்விதம் ஓடிய அவர்கள் மல்லிகா உட்கார்ந்திருந்த மேன் மாடத்திற்கு ஏறிப் போகும் பொருட்டு உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தடுக்கி விழுந்து, அதைக் கீழே தள்ளிவிட்டு அப்பால் போயினர். மல்லிகாவைச் சுற்றி நாற் புறங்களிலும் நெருப்பும் புகையும் சூழ்ந்து கொண்டன. அவள் கீழே இறங்கப் பார்த்தாள்; ஏணி காணப்படவில்லை . அவள் பெரிதும் கலக்கமும் திகைப்பும் அடைந்தாள். கீழே குதிப்பதற்கும் அந்த இடம் நிரம்பவும் உயரமாக இருந்தது. அதைக் கண்ட மல்லிகா, தனக்கு அன்றோடு முடிவு காலம் வந்து விட்டது என்று தீர்மானித்துக் கொண்டு ஜனங்களைப் பார்த்து, "உங்களுக்குப் பயமில்லை. மெதுவாய்ப் போங்கள்; மெதுவாய்ப் போங்கள்" என்று உரக்கக் கூவினாள். அதைக் கேட்ட மோகனராவ் நிரம்பவும் பதறி, "நீ அங்கே நிற்காதே; கீழே குதித்து விடு; கீழே குதித்து விடு" என்று கூச்சலிட்டார்.

“நான் இனி பிழைப்பதேது? இதோடு என் ஆயுசு முடிந்தது" என்று மறுமொழி சொல்லிவிட்டு மல்லிகா சும்மாவிருந்தாள். அதற்குள் நெருப்புத் தணல்கள் அவள் மீது விழ ஆரம்பித்தன. பெருத்த ஆரவாரத்தோடு மோகனராவ் மேடையின் மீது பாய்ந்து நெருப்பிற்குள் புகுந்து அங்கு விழுந்து கிடந்த ஏணியை நிறுத்தி அதன் மேல் ஏறி, "இங்கே வா!" என்று கூறியவண்ணம் குழந்தையை எடுப்பதைப் போல அவளைக் கட்டித் தூக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/180&oldid=1233848" இலிருந்து மீள்விக்கப்பட்டது