பக்கம்:வசந்த மல்லிகா.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

வஸந்தமல்லிகா

இனி செய்யக் கூடியது ஒன்றுமில்லை. அந்த ஏணியை எடுத்தாலன்றி தப்ப வேறு வழியில்லை " என்றார்.

"அதை எப்படி எடுக்கிறது? நெருப்புக்குள் புகுந்தல்லவா எடுக்க வேண்டும். அதற்குள், பாதி உடம்பு எரிந்து போகுமே!" என்றாள் மல்லிகா.

"இருந்தாலும் பாதகமில்லை ; நான் போகிறேன்; எப்படியாவது நீ மாத்திரம் தப்புவது போதும்" என்று சொல்லி ஏணியை நோக்கி ஓடப் பார்த்தார்; பிரம்மாண்டமாயிருந்த நெருப்பிற்குள் நுழைய அஞ்சி சிறிது பின்வாங்கினார். போக வேண்டாம் என்று மல்லிகாவும் அவரைத் தடுத்தாள். இரண்டொரு நிமிஷத்தில் அவர்களை ஜ்வாலை தகிக்க ஆரம்பித்தது. அவள் அதைப் பொறாமல் புழுவைப் போலத் துடித்துத் தத்தளித்ததைக் கண்ட மோகனராவ், தனது மனதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரே பாய்ச்சலாக நெருப்பிற்குள்ளே பாய்ந்து, ஏணி இருந்த இடத்திற்குப் போய், அதை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். தெய்வச் செயலாக ஏணியில் நெருப்புப் பிடிக்காமல் இருந்தது. அவர் தீயில் முழுகி வந்தமையால், அவரது தேகம் முழுதும் வெந்து வெதும்பிப் போய்க் கொப்பளித்தது. தலை மயிர், மீசை, புருவம் முதலியவை கருகி உதிர்ந்து போயின. தேகம் முழுதும் நெருப்பாக எரிந்தது.

அவர் உடனே ஏணியை சுவரில் நிறுத்தி அதில் மல்லிகாவை விரைவாக ஏற்றினார். அவள் அதன் வழியாக விரைந்தேறி ஓட்டின் மேல் போய் நின்று கொண்டு, சீக்கிரம் வந்துவிடும்படி அவரையும் அழைக்க, அவரும் ஏறி ஓட்டிற்குப் போய்ச் சேர்ந்தார். "தப்பினோம் பிழைத்தோம்" என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் அந்தக் கூரையின் உச்சி வரையில் சென்றனர். ஆனால், அந்தக்கூரையின் அப்புறத்தில் இறங்க மார்க்கமில்லை. கூரையின் உச்சிக்கப்பால் அரண்மனையின் மதில் நின்று கொண்டிருந்தது. அது அந்த உச்சி மேட்டின் மேல் ஒரு பனை உயரமிருந்ததாகையால், அதன் மேல் ஏறுவது கூடாத காரியமாய் இருந்தது. தவிர மதிலுக்கப்புறம், பள்ளமாதலால் அதன் மேல் ஏறுவதால் யாதொரு பயனும் இல்லாதிருந்தது. ஆகையால், கொட்டகை முழுதும் எரிந்து அடங்கும் வரையில் அவர்கள் கூரையின் மீதிருந்து, பிறகு அதே வழியாக இறங்கி வர வேண்டும் என்பதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/184&oldid=1233855" இலிருந்து மீள்விக்கப்பட்டது