பக்கம்:வசந்த மல்லிகா.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

வஸந்தமல்லிகா

மல்லி : எனக்கும் அதுதான் விசனமாக இருக்கிறது. கலியாணமானாலும் நான் உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து போகவே மாட்டேன். நான் இங்கேதான் இருக்கப் போகிறேன்.

கிரு : நானும் பீமராவிடம் கேட்டுக்கொள்கிறேன். உன்னை விட்டு நாங்கள் ஒருநாளும் பிரிந்திருக்க மாட்டோம். அதிருக்கட்டும். தமயந்தி எப்போது வஸந்தராவைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாளோ தெரியவில்லை. அவளும் அதிர்ஷ்டசாலிதான் - என்றாள்.

அதைக் கேட்ட மல்லிகாவின் தேகம் திடுக்கிட்டு நடுங்கியது. அவளது அழகிய முகத்தில் விசனம் குடிகொண்டது. அவள் அதை மறைத்துக் கொண்டு, "ஆம்; நிரம்பவும் அதிர்ஷ்டசாலிதான்" என்றாள்.

கிரு : அவளை நான் நிரம்பவும் கெட்டவள் என்று அநியாயமாக நினைத்தேன். வஸந்தராவின் விஷயத்தில் அவள் பட்ட பாட்டைப் பார்த்தால், அவளைப் பற்றி விரோதமாக நினைப்பதற்கே இடமில்லை. அதோ வருபவர் யார்? நம்முடைய வீட்டிற்குள் வருகிறாரே!

மல்லி : (எட்டிப் பார்த்து) கலியாணபுரம் ஜெமீந்தாரல்லவா வருகிறார் - என்றாள்.

உடனே கிருஷ்ணவேணி கீழே இறங்கிப் போய், அவரை உபசரித்து மரியாதையோடு மேன்மாடத்திற்கு அழைத்து வந்தாள். மல்லிகாவும் புன்சிரிப்போடு எழுந்து அவருக்கெதிரில் ஒரு நாற்காலியைப் போட்டுவிட்டு சிறிது தூரத்தில் வணக்கமாக நின்றாள்.

மோக : நான் அதிகமாக உட்காருவதற்கு நேரமில்லை; இந்த ஊரை விட்டு சென்னைக்குப் போகிறேன். அதற்கு முன் கடைசியாக உன்னிடம் சொல்லிக்கொண்டு போகலாம் என்று வந்தேன்.

மல்லி : (மெதுவாக) இந்த ஊருக்கே இனிமேல் வருவதில்லையோ?

மோக : ஆம்; அநேகமாய் இல்லை.

கிரு : பட்டணத்தில் என்ன விசேஷம்?

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/218&oldid=1233962" இலிருந்து மீள்விக்கப்பட்டது