பக்கம்:வசந்த மல்லிகா.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

213

கண்மணி! என்னிடத்தில் நீ இன்னமும் கபடமாகப் பேசுகிறாயே! நீ சொன்ன வாக்குறுதிக்குப் பழுது வரலாமா? உன்னை என் வசத்தில் ஒப்புவிக்க, நீ ஏன் இவ்வளவு பயப்படுகிறாய்? உன் மனசை ஏன் இப்படி வருத்திக் கொள்ளுகிறாய்? என் மேல் உனக்குச் சரியான பிரியம் ஏற்படவில்லை என்றுதானே நினைக்கிறாய்? அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை . உன் விஷயத்தில் நான் பரமப் பிரீதியாக இருக்கிறேன். உனக்கு வேண்டியது அவ்வளவுதானே. பழகப் பழக உன் பிரியம் ஏற்பட்டுவிடும் என்பதற்குச் சந்தேகமே இல்லை" என்று நிரம்பவும் பரிதாபகரமாக மறு மொழி கூறினான்.

அப்போது, வேடனது வலையிலிருந்து தப்ப முயன்ற பறவையை நான்கு பக்கங்களிலும் விலக்க முடியாமல் வலை நன்றாக வளைத்துக் கொள்வதைப் போன்ற நிலைமையில் இருந்த மல்லிகா, "எனக்குக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பமே உண்டாகவில்லை. இந்த விஷயத்தில் ஆசை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளவோ முயன்றும் சிறிதும் பயன் உண்டாகவில்லை. இந்த விஷயத்தில் பிரவேசிக்க வேண்டாம் என்று ஏதோ என் மனசில் தடுக்கிறது. இதனால் ஆயுட் காலம் முடிய விலகா துன்பமும் துயரமும் ஸம்பவிக்குமன்றி நன்மை உண்டாகப் போவதில்லை; நான் சொல்வதைக் கேளுங்கள். காரியம் கெட்டுப் போவதற்கு முன் இப்போதே எரிச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேண்டாம். இந்த எண்ணத்தை விலக்கி விடுங்கள்.

பீம : என் ராஜாத்தி! இந்தச் சமயத்தை விடாமல் காரியத்தை நிறைவேற்றினால், இனி ஆயுட்காலம் முற்றும் நன்மையும் இன்பமும் பெருகும் என்று என் மனசில் ஏதோ தெரிவிக்கிறது. வீணாகப் பிடிவாதம் செய்யாதே. நான் சொல்வதைக் கேள். என் கோமளாங்கி! உன்னை விட்டுப் போவேன் என்றா நினைக்கிறாய்? இந்த இடத்திலேயே கத்தியால் குத்திக் கொண்டு என்னுடைய உயிரை உன்னுடைய பாதத்தடியிலேயே விட்டு விடுவேனே அன்றி, உன்னை இனி ஒரு க்ஷணமும் விட்டுப் பிரிந்து உயிருடன் இருக்க மாட்டேன். வீணாகப் பழியை ஏற்றுக் கொள்ளாதே. உன்னுடைய முகம் ஏன் இப்படி விசனத்தைக் காட்டுகிறது? உன்னுடைய அழகிய செந்தாமரை முகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/231&oldid=1234013" இலிருந்து மீள்விக்கப்பட்டது