பக்கம்:வசந்த மல்லிகா.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

வஸந்தமல்லிகா

புன்சிரிப்போடு, என்னிடம் ஒரு வார்த்தை பேசக் கூடாதா? கண்ணே ! இப்படி வா; எங்கே ஒரு முத்தங் கொடு" என்று மனது இளகக் கூறியவண்ணம், அவளை ஆலிங்கனம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் அருகில் நெருங்கினான்; அந்தச் சமயத்தில் தடதடவென்று காலடியோசை செய்து கொண்டு மெத்தைப் படியின் வழியாக யாரோ மேன்மாடத்திற்கு வந்ததை உணர்ந்து, அவளிடம் நெருங்காமல் விலகி நின்றான். அடுத்த நிமிஷத்தில் கிருஷ்ணவேணி அவர்களுக்கெதிரில் வந்து நின்றாள். அவளது முகம் ஒருவிதமான பதைபதைப்பைக் காட்டியது. அவளைக் கண்ட பீமராவ் இன்னம் சிறிது தூரத்தில் விலகி நின்றான்.

மல்லி : கிருஷ்ணவேணி! என்ன விசேஷம்? உன் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறதே?

கிரு : விசேஷம் ஒன்றுமில்லை. கவலைப்படாதே. உன்னைப் பார்க்க வேண்டும் என்று சில மனிதர் வந்திருக்கிறார்கள்.

மல்லி : (திடுக்கிட்டு) என்னைப் பார்க்கவா? யார் அது? என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள்.

கிரு : (புன்சிரிப்போடு ) நீ எவ்வளவு யோசித்தாலும், அது இன்னாரென்று உன்னால் யூகிக்க முடியாது - என்றாள்.

அந்தச் சமயத்தில், "ஏன் அவ்வளவு சிரமம் கொடுக்க வேண்டும்? நானே இதோ வந்து விட்டேன்" என்ற ஒரு குரல் கேட்டது. உடனே தமயந்திபாயி அவர்களுக்கு முன்பு தோன்றினாள். அவளைக் காணவே பீமராவின் முகம் திடீரென்று மாறியது. அவனது அடிவயிற்றில் நெருப்பு வீழ்ந்ததைப் போல பெருத்த திகிலடைந்து வாய் திறந்து பேசவும் வல்லமையற்றவனாய், திகைத்து நின்றான். அவளது குரலைக் கேட்டவுடன் மல்லிகாவின் உடம்பில் சுருக்கென்று ஒருவிதச் சிலிர்ப்பு பரவியது. வஸந்தராவை மணக்கப் போகிற தமயந்தி தன்னிடத்தில் என்ன காரியமாக வந்திருக்கிறாளோ என்று மல்லிகா மலைத்தாள். அவளது விஷயத்தில் உண்டான ஒரு விதப் பொறாமையையும், விசனத்தையும் அடக்கிக் கொண்டு புன்சிரிப்பைத் தோற்றுவித்து அவளை நோக்கி, "வர வேண்டும்; வர வேண்டும். வந்தது மிக்க அருமையாக இருக்கிறது" என்று உபசரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/232&oldid=1234015" இலிருந்து மீள்விக்கப்பட்டது