பக்கம்:வசந்த மல்லிகா.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

வஸந்தமல்லிகா

வஸ : (உறுதியாக) சொல்லலாம். எதைப் பற்றியும் எனக்கு இனி கவலையில்லை.

தம : இப்போது தாங்கள் பவானியம்மாள்புரத்தின் ஜெமீந்தார் அல்லவா?

வஸ : இந்த ஜெமீன் வந்தது என்னுடைய துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

தம : ஏன் அப்படி நினைக்க வேண்டும்?

வஸ : அதனாலேதான் நான் இங்கே வர நேர்ந்தது. வந்ததனால் என்னுடைய ஆயுட்காலம் வரையில் நீங்காத பெருத்த விசனமூட்டை என் தலைமேல் வந்து இறங்கி விட்டது. தவிர, இந்த ஜெமீனை வைத்துக்கொண்டு நான் இனி என்ன செய்யப் போகிறேன்? பரசுராமபாவா வகை தெரியாமல் இதை எனக்கு விட்டுப் போய் விட்டார். ஆனால், அவர் எனக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், இதை வேறு யாருக்கோ கொடுத்து விட்டதாக எழுதியிருந்தார். ஆனால், சாஸனம் மாத்திரம் என் பேரில் இருக்கிறது.

தம : அந்தக் கடிதத்தை கிழித்து எறிந்து விட்டீர்களோ?

வஸ : இல்லை, இல்லை; அதையா கிழித்தெறிவேன்? நிரம்பவும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வைத்திருக்கிறேனே! வேறு யார் பேரிலாவது சாஸனம் எழுதப்பட்டிருந்தால், அதற்கு இந்தக் கடிதமும் அநுகூலமாக இருக்குமல்லவா?

தம : ஓகோ! அப்படியா! பிந்திய சாஸனம் அகப்படுவது தங்களுக்குப் பிரதிகூலமானதல்லவா? அப்படியிருக்க தங்களுக்கு விரோதமாக தாங்களே சாக்ஷி தேடி வைத்துக் கொள்ளுகிறீர்களோ! அதுவும் நல்ல காரியந்தான். எல்லாம் போய்விட்டால், தாங்கள் ஏழைகளில் ஒருவர் ஆய்விட வேண்டாமா?

வஸ : ஆம்; உண்மைதான். அது மாத்திரமல்ல. நான் இது வரையில் செலவு செய்த ஏராளமான பொருளை எல்லாம் திருப்பிக் கொடுக்கவும் வேண்டும். இத்தனை கேள்விகள் எதற்கு? ஏதாவது சாஸனம் அகப்பட்டிருக்கிறதா. சொல்லி விடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/252&oldid=1234056" இலிருந்து மீள்விக்கப்பட்டது