பக்கம்:வசந்த மல்லிகா.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்தவர் பிழைத்தது எங்ஙனம் சொல்வது!

257

அதைக் கண்ட வஸந்தராவ் தத்தளித்தவராய், "என் அன்பே! பார்த்தாயா! உன்னை வஞ்சித்தது நானா! உனக்கு ஒரு நிமிஷ நேரம் துன்பம் வரக்கூடியதாயிருந்தால் அதை விலக்கும் பொருட்டு என்னுடைய உயிரையும் கொடுப்பேனே! நானா உனக்குத் தவறு செய்பவன்! நீயே என் விஷயத்தில் தவறாக நடந்தாய்?" என்று இளகி உருகித் தெரிவிக்க, அதைக் கேட்ட மல்லிகா காம்பொடிந்த மலரைப்போல் அவரது மார்பின் மீது அப்படியே சாய்ந்து விட்டாள். வெட்கமும் துக்கமும் அழுகையும் பொங்கி எழுந்தன! விம்மி விம்மி அவள் அழுதாள். "ஆம்; மகா பாவியாகிய நான்தான் தங்கள் விஷயத்தில் பெருத்த பிழை செய்துவிட்டேன். அதன் பொருட்டு நான் எத்தனையோ வகைகளில் தண்டனைகளும் அடைந்து விட்டேன். இனி தாங்களே என் கதி! இத்தனை நாட்கள் தங்கள் மனத்தை வதைத்த குற்றத்தையெல்லாம் மறந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஆறுவது சினம் என்று மூத்தோர் சொன்னதை, தாங்கள் இந்தச் சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டும்" என்ற வார்த்தைகள் அவளது வாயிலிருந்து நிரம்பவும் தடுமாற்றத்தோடு வந்தது. அதைக் கேட்ட வஸந்தராவ் மெய்ம்மறந்து ஆவேசமடைந்து அவளை அப்படியே அணைத்து முத்தமிட்டு, "ஆ! என் சீமாட்டி! விதி வலி யாரை விட்டது! நம்முடைய கால வித்தியாசமே இப்படி நம்மைப் பிரித்து விட்டது. துன்புற்ற பின் இன்பம் அடைவதே தெய்வத்தின் இன்னருள் என்றே நாம் எண்ண வேண்டும். போனது போகட்டும். இனி இதைப் பற்றி நீ வருந்த வேண்டாம். நீ விசனப்படுவதைக் காண என் மனம் பதைக்கிறது" - என்று தேற்றி, அவளை விட்டுத் தாம் பிரிந்த பிறகு தாம் அடைந்த துன்பங்களையும் துயரங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட மல்லிகா துன்பக் கடலில் மூழ்கிப் பாகாய் உருகி, தான் பீமராவின் வலையில் அகப்பட்டது, மோகனராவ் நெருப்பிலிருந்து தனது உயிரைக் காப்பாற்றியது, தமயந்தி பாயி மோகனராவ் ஆகியோர் பீமராவின் வஞ்சகங்களை வெளிப் படுத்தியது முதலிய வரலாறுகளைத் தெரிவித்தாள். அதைக் கேட்ட வஸந்தராவ் பெரிதும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்

வ.ம. - 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/275&oldid=1234416" இலிருந்து மீள்விக்கப்பட்டது