பக்கம்:வசந்த மல்லிகா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வஸந்தமல்லிகா

விடுத்துக் கலங்கிப் பொழுதைப் போக்கி நெடிய நேரங் கழித்த பின் திரும்பி வீட்டிற்கு வருவது வழக்கம்.

முன்கூறப்பெற்ற இரவில் வீட்டைவிட்டுப் புறப்பட்ட மல்லிகா சமுத்திரக் கரையை அடைந்தாள். அந்த சுந்தரி இருளில் வழியை அறியாமல் தத்தளிப்பாளென்று நினைத்து அவளது பரிதாப நிலைமையைக் கண்டிரங்கி அவளுக்கு நிலவை உதவி வழிகாட்டி இன்பமூட்டவேண்டும் என்னும் நோக்கத்துடன் வந்ததைப் போல குளிர்ந்த சந்திரன் அப்போதே வானத்தில் தோன்றினான். அவனது கிரணங்கள் சமுத்திரத்தின் நீரில் படியவே தண்ணீர் முழுதும் பொன்னிராய் மாறிப் பளபளவென்று மின்ன ஆரம்பித்தது. அலைகள் மிகுந்த கோபத்தோடு கிளம்பி கரையில் மோத ஆரம்பித்தன. தென்றல் காற்றினால் தாலாட்டப் பெற்றுத் துயில்வனபோல, மரம், செடி, கொடிகள், பட்சிகள் முதலிய யாவும் சிறிது சிறிது அசைந்து மோன நிலையிலிருந்தன. அந்த விநோதக் காட்சியில் மனதைச் செலுத்தி அதில் ஈடுபட்டவளாய் மல்லிகா கரையோரமாக அடிமேலடி வைத்து நடக்க ஆரம்பித்தாள். துக்கோஜிராவின் வீட்டிலிருப்பதை விட சமுத்திரக்கரையோரமே அவளுக்குத் தாய் வீடு போலப் பேரின்பம் ஈந்தது. புண்பட்ட அவளது மனத்திற்கு அந்த இனிய காட்சியே ஆறுதலையும் மனவமைதியையும் உண்டாக்கியது.

அவ்வாறு அவள் சிறிது நேரம் இன்புற்றிருந்த சமயத்தில், அவளது மனதில் தனது ஆதரவற்ற நிலைமையும், தானடைந்த துன்பங்களும் ஒன்றின்பின் ஒன்றாய்த் தோன்றின. தனது தந்தையின் ஞாபகமாத்திரம் அவளுக்கு நன்றாய் உண்டானதேயன்றி, தனது தாய் எப்படி இருந்தாளென்று தன் மனதில் பாவிப் பதற்குக்கூட அவள் வல்லமையற்றவளாய் இருந்தாள். தன்னை ஈன்ற சமயத்தில் தனது தாய் இறந்துபோய் விட்டாளென்பதை மாத்திரம் அவள் கேள்வியுற்றிருந்தாள். தான் திக்கற்றவளாயும், உறவினரென்று சொல்லிக்கொள்வதற்கு வேறெந்த மனிதரையும் பெறாதவளாயும் இருந்ததை நினைத்துக் கண்ணீர் விடுத்தாள். சுயநலமே உருவாய், வெறுப்பும், கபடமும், பொறாமையும் குணமாய்ப் பெற்ற கமலா, ஸீதா முதலியோரிடத்தில் வேடர் வலையிற்பட்ட மானைப்போலத் தான் அகப்பட்டுக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/32&oldid=1229175" இலிருந்து மீள்விக்கப்பட்டது