பக்கம்:வசந்த மல்லிகா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வஸந்தமல்லிகா

மல்லிகா! இப்போதே உண்மையை உணர்ந்தேன். அன்பில்லா வீட்டிலிருப்பதைவிட, இன்பந் தரும் கடவுளுடைய சிருஷ்டிப் பொருள்களுடன் ஏகாந்தமாக இருந்து ஆநந்தமடைவதற்காகவே நீ இங்கே இரவில் வருகிற வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறாய். நல்லது; நீ எங்கே இருக்கிறாய்? தயவு செய்து தெரிவி. உனக்கு நான் ஏதாயினும் உதவி செய்யக் கூடுமானால் செய்கிறேன்” என்று அருமையாய்க் கேட்டார் ஜெமீந்தார்.

அதுவரையில் கபடமில்லாமல் அவ்வளவு உள்ளன்புடன் அவளது விஷயத்தில் பச்சாதாபத்தைக் காண்பித்து எவரும் பேசி அறியாதவள் ஆகையால், மல்லிகாவுக்கு அவருடன் சம்பாஷிப்பதில் ஒருவித மனக்கிலேசம் உண்டானதாயினும், புண்பட்ட அவளது மனதிற்கு அது ஒருவித ஆறுதலையும் ஆநந்தத்தையும் உண்டாக்கியது.

"ஐயா இந்த ஊரில் துக்கோஜிராவென்று ஒருவர் இருக்கிறார். நான் அவருடைய வீட்டிலிருக்கிறேன்" என்றாள் மடந்தை.

"ஒகோ பூனாவிலிருந்தவரோ?" என்றார் ஜெமீந்தார். "ஆம்! அவர்தான். நான் அவருடைய சிநேகிதரின் புத்திரி. எனக்கு உறவினர் எவருமில்லை. ஆகையால், அவரே என்னைக் காப்பாற்றி வருகிறார்" என்றாள் மல்லிகா.

"அப்படியா அவரை நான் நன்றாக அறிவேன். அவர் இன்று காலையில்கூட என்னிடம் வந்திருந்தாரே! அவருக்கு இரண்டு பெண்கள் கூட இல்லையா?” என்றார் ஜெமீந்தார்.

"ஆம் ஆம்; இருக்கிறார்கள். எனக்கு நேரமாகிறது. நான் போகிறேன். நான் இந்த வேளையில், தனிமையில் அன்னிய புருஷருடன் பேசிக்கொண்டிருப்பது தவறு. மன்னிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே மல்லிகா வேகமாய் நடந்து மறைந்து போய்விட்டாள்.

ஜெமீந்தாரின் மனதும் கண்களும் அவளுடன் நெடுந்தூரம் வழித்துணை சென்றன. அவள் மறைந்தவுடன் கண்கள் மாத்திரம் மனத்துடன் செல்ல வல்லமையற்றதாய்த் தோற்றுப் பின்னிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/42&oldid=1229210" இலிருந்து மீள்விக்கப்பட்டது