பக்கம்:வசந்த மல்லிகா.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வஸந்தமல்லிகா

சும்மாவிரு; அவளுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது" என்றாள் கமலா. அப்போது மல்லிகா சமையலறையிலிருந்து அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து புன்சிரிப்புடன், "சமையல் முடிந்து விட்டது” என்றாள். அவள் நெடுநேரமாக நிரம்பவும் உழைத்து, விருந்திற்குத் தேவையான பக்குவங்களைத் தயாரித்தாளேனும், அவளுடைய உடம்பிலும் உடையிலும் ஒரு சிறிய மாசும் படியாதிருந்தது. அவள் சாதாரணமாக வெள்ளைச் சீட்டிப் பாவாடையும், தாவணியும், இரவிக்கையும் அணிந்துகொண்டிருந்தாளானாலும், அவளது இயற்கை அழகினாலும், குளிர்ந்த பரந்த முகத்தினாலும், மற்றவரைக் காட்டிலும் அவள் மிகுந்த வசீகரத் தன்மையைப் பெற்றிருந்தாள்.

அவளைக் கண்ட கமலா, "அடி மல்லிகா நீ என்ன சுத்தப் பட்டிக்காட்டு மனுவியா இருக்கிறாயே! இப்போது வரப் போகிறவர் யார் தெரியுமா?" என்று ஏளனமாகக் கேட்டாள்.

"யாரோ உங்கள் அப்பாவின் சிநேகிதரென்று தெரிவித்தீர்களே! அதைத் தவிர எனக்கென்ன தெரியும்? நீங்கள் சொன்னால் தானே தெரியப்போகிறது. நீங்கள் இருவரும் நன்றாகச் சிங்காரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், கலியாணத்துக்குப் பெண் பார்க்க யாரோ வரப்போகிறதாக நினைத்தேன்" என்று சிரித்துக் கொண்டு விடையளித்தாள் மல்லிகா.

"நாங்கள் சிங்காரித்துக் கொண்டிருப்பதில் உனக்கேன் இவ்வளவு விசனம்? உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? எங்களுடைய சொந்த ஆடையாபரணங்களை நாங்கள் அணிந்து கொண்டிருக்கிறோம்" என்றாள் ஸீதா.

"உங்களை யாராவது கலியாணஞ்செய்து அழைத்துக் கொண்டு போய்விட்டால், பட்டிக்காட்டாளாகிய எனக்கு பட்டணத்து நாகரிகம் கற்றுக்கொடுக்க ஒருவருமில்லாமல் போய்விடுமே என்பதுதான் என் வருத்தம். மற்றபடி சிங்காரத்தைப் பற்றி சந்தோஷமே" என்றாள் மல்லிகா.

"ஒகோ! உன் மனது இன்னதென்பது நன்றாகத் தெரிகிறது. நீ எங்களுக்குக் கலியாணம் நடப்பதைக் கண்டு பொறுக்க மாட்டாய் போலிருக்கிறதே உண்ட வீட்டுக்கு இப்படியா இரண்டகம் நினைத்தாய்? இருக்கட்டும்" என்று மிகுந்த கோபத்தோடு மொழிந்தாள் கமலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/46&oldid=1229224" இலிருந்து மீள்விக்கப்பட்டது