பக்கம்:வசந்த மல்லிகா.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

வஸந்தமல்லிகா

நான் நினைப்பதைக் காட்டிலும், நீ அதிகம் துன்புறுவது நிச்சயமாகத் தெரிகிறது. இனி ஒரு நொடியாவது நீ அவர்களுடனிருப்பது சரியல்ல; நீ அவர்களுடைய வீட்டில் இனி இருப்பது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை" என்று மிகுந்த கவலையோடு கூறினார் ஜெமீந்தார். "அவர்களுடைய வீட்டிலிருக்கக் கூடாதா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் மல்லிகா.

"ஆம், நான் உண்மையாகவே பேசுகிறேன். நீ எவ்வளவோ துன்பங்களையும் துயரத்தையும் அநுபவித்துவிட்டாய். அதுவே போதும். நான் உன்னைக் கண்டமுதல் உன்னையே கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று உறுதி செய்து கொண்டேன். இன்னதென்றறியக்கூடாத ஒருவகையான ஆசை என் மனசில் தோன்றி, படிப்படியாய் அதிகரித்து வருகிறது. உன்னையே நான் என்னுடைய உயிராக மதிக்கிறேன்" என்று அன்போடு கூறித் தமது வலக்கரத்தை நீட்டி அவளது மோவாயைப் பிடித்தார்.

அவரது இனிய மொழியைக் கேட்டுத் திகைத்து நின்ற மல்லிகா, தன்னைத் தீண்டிய அவரது கரத்தைத் தடுக்காமல் சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அவரது கரம் பட்டவுடன் அவளது தேகம் முழுவதும் ஒருவித இன்பமும் ஆநந்தமும் பரவின. இன்பசாகரத்தில் மிதப்பவளைப்போல மயங்கிச் சிறிது நேரம் அசைவற்று அவள் நின்றாளாயினும், அடுத்த நிமிஷத்தில் ஸ்திரீகளுக்குரிய நாண்ம் திரும்பி மேற் கொள்ள, அவள் தனது முகத்தை இழுத்துக்கொண்டு ஒர் அடி பின்னால் நகர்ந்தாள்.

"கண்மணி மல்லிகா! அன்று நிலவில் உன்னைக் கண்ட முதல் உன் வடிவமே என் மனசில் குடிகொண்டு என்னை வருத்துகிறது. நீயே என் உயிர்நிலையாகத் தோன்றுகிறாய். என் அன்பே எப்படியாவது நான் உன்னையே மணக்கவேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன். உனக்கும் என்மேல் விருப்பந்தானா? என்னை மணப்பாயா? அல்லது என்னாயுட்காலம் முழுவதும் என்னை விசனக்கடலில் ஆழ்த்தி விடுவாயா? கண்ணே! நீ இப்போது சொல்லப்போகும் அந்த ஒரு சொல்லிலேயே என் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. நீ மெளனமாயிருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றுகிறது. தயவுசெய்து தெரிவி!" என்று கெஞ்சி மன்றாடினார் ஜெமீந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/68&oldid=1229332" இலிருந்து மீள்விக்கப்பட்டது