பக்கம்:வசந்த மல்லிகா.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

வஸந்தமல்லிகா

உன்னிடம் சொல்ல வேண்டும். நீ வருவாய் வருவாயென்று இராப்பகலாய் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லி, வஸந்தராவ், துக்கோஜிராவ் முதலியோருடன் பவானியம்மாள்புரத்து அரண்மனையைச் சோதனை செய்ததையும், அங்கு பரசுராம பாவாவின் மனைவியினது படத்தைக் கண்டதையும், அதற்கும் மல்லிகாவிற்கும் இருந்த ஒற்றுமை முதலியவற்றையும் தெரிவித்தான். "இதுதானா பிரமாதம்! ஒருத்தியைப் போல் மற்றொருத்தி இருப்பது ஒரு விசேஷமா! இதனால் நமக்கென்ன அநுகூலம் ஏற்படப்போகிறது? ஒன்றுமில்லை" என்று அலட்சியமாகத் தெரிவித்தான் பீமராவ்.

"அப்படி நினைக்கக் கூடாது. அற்ப சங்கதி பெரிய விஷயத்தைக் கண்டுபிடிக்க உதவும். படம் அந்தப் பெண்ணைப் போலவே இருக்கிறது. அதற்கும் அவளுக்கும் சம்பந்தமில்லா விட்டால் அவ்வளவு ஒற்றுமை ஒருநாளும் இருக்காது. தவிர, மல்லிகா என்பவளுக்கும் துக்கோஜிராவுக்கும் சொந்தமில்லை. அவளும் பூனாவிலிருந்து வந்தவள். அவளுடைய தாய் தகப்பன் யாரென்பது எவருக்கும் தெரியாது. இவற்றையெல்லாம் நன்றாக யோசித்துப் பார்" என்றார் ஸகாராம்ராவ்.

"அதில் ஏதாவது ரகஸியமிருக்கலாம். அந்தப் படத்தையும், அவளையும் நான் பார்ப்பேனாகில், அதன் சம்பந்தத்தை உடனே சொல்லி விடுவேன். அவருடைய மாளிகையிலிருக்கிற படத்தை நான் எப்படிப் பார்க்கப் போகிறேன்?" என்றான் பீமராவ்.

உடனே ஸகாராம்ராவ் எழுந்து தனது பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த அந்தப் படத்தை எடுத்து பீமராவுக்குக் காட்ட அவன் அதைக் கண்டவுடனே திடுக்கிட்டு திகைத்து ஒன்றும் பேசாமல் சற்று மெளனமாக நின்றான்.

“எப்படி இருக்கிறது பார்த்தாயா?" என்றான் ஸகாராம்ராவ். "இந்தப் படத்திலுள்ள பெண்ணை நான் அரை நாழிகைக்கு முன் வம்புலாஞ்சோலையில் நேரில் பார்த்தேன். அவளுக்கும் இதற்கும் இவ்வளவு ஒற்றுமை இருப்பது அதிசயமாகத்தான் இருக்கிறது" என்றான் பீமராவ்.

"அவள் பவானியம்மாள்புரத்தில் அல்லவா இருக்கிறாள்! நீயாவது அவளை இங்கே காண்பதாவது” என்றான் ஸகாராம்ராவ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/98&oldid=1231384" இலிருந்து மீள்விக்கப்பட்டது