பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

99

அப்போது அங்கே கண்டி வந்து எட்டிப் பார்க்கிறது. இடையில் வண்ணம் தெரியாத ஒரு சிறு துண்டு ஆடை அழுக்கும் சளியும் துடைக்கப் பெறாத முகம் பிரிந்த தலை

“குழந்தை, இங்கு வா?”

இவள் அழைத்த குரல் கேட்டதுதான் தாமதம், அவள் விரைந்து உள்ளே சமையற்கட்டுக்குள் மறைகிறாள்.

ராதை தட்டில், உணவுக் கலங்களை ஏந்தி வருகிறாள்.

நெய் மணக்கும் அப்பம். பால் சேர்த்த பொரிக்கஞ்சி. இனிய கனிகள்... இலை விரித்து, அதில் அப்பங்களை, ஆவி மணக்கும் இனிய பண்டங்களை எடுத்து வைக்கிறாள்.

“ராதை, உன் மகள் கண்டியைக் கூப்பிடு? எட்டிப் பார்த்துவிட்டு ஒடுகிறது. நான் கூப்பிட்டால் பயமா?”

“தேவி. நீங்கள் மன்னருடன் புறப்படும் நேரம்.அவள் எதற்கு? அந்தச் சோம்பேறியை மீனைத் தேய்த்துக் கழுவச் சொன்னேன். ஒரு வேலை செய்வதில்லை. இங்கே வேடிக்கை பார்க்க முற்றத்துக்கு வருகிறாள். தேவி, இது கிழங்குமாவில் செய்த அப்பம் ருசி பாருங்கள்!”

பூமகள் அப்பத்தை விண்டு சிறிது சுவைக்கிறாள். “மிக ருசியாக இருக்கிறது. நீ குழந்தையை இங்கே கூப்பிடு”

அவள் சொல்வதற்கு முன் கண்டி, அவசரமாக முகத்தை நீரில் துடைத்துக் கொண்ட கையுடன் சிரித்த வண்ணம் வருகிறாள்.

“அடி தரித்திரம் போடி இங்கே ஏன் வந்தாய்?. மனசுக்குள் பெரிய அரசகுமாரி என்ற நினைப்பு?” என்று ராதை குழந்தையை அடித்து விரட்ட அவள் அழும் குரல் செவிகளில் துன்ப ஒலியாக விழுகிறது.

“ராதை?” என்று கடுமையாக பூமி எச்சரிக்கிறாள்.