பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வனதேவியின் மைந்தர்கள்

“எதற்கு உன் கோபத்தைக் குழந்தையின் மீது காட்டுகிறாய்! இந்தா, உன் அப்பமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என் முன் உனக்கு இத்துணை கடுமை காட்ட உன் மனசில் ஏன் அவ்வளவு வெறுப்பு:

“தேவி!” என்று நிலந்தோய ராதை பணிந்து எழுகிறாள். அவள் மேலே போட்டிருக்கும்.துண்டு ஆடை நிலத்தில் வீழ்கிறது.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் அவளிடம் காட்டும் அன்பும் சலுகையும் மற்றவர்களின் பொறாமையைத் துண்டிவிடும் ஏழை அடிமைகளுக்குப் பெருந்தன்மை கிடையாது”

அவளுடைய சொற்கள் சுருக்கருக்கென்று ஊசிகள் போல் தைக்கின்றன.

“ஏழையாவது?அடிமையாவது? என் செவிகள் கேட்க, இந்த அரண்மனையில் அப்படிப் பேசாதே ராதை அப்படிப் பார்க்கப் போனால் நானும் குலம் கோத்திரம் அறியாத அநாதையே!”

“சிவ சிவ. நான் மகாராணியைக் குற்றம் சொல்வேனா? அவரவர் அவரவர் இடத்தில் பொருந்தி இருப்பதே உகந்தது. ஊர்க்குருவி, ஊர்க்குருவிதான்.கருடப்பறவை கருடப்பறவைதான். உயர்ந்த குலத்தில் உதித்த, சாம்ராச்சிய அதிபதியின் பட்டத்து ராணி தாங்கள். தங்களுக்குப் பூரண சந்திரன் போல் ஒரு மகன் பிறக்க வேண்டும். இந்த அழுக்குப் பண்டத்தை மடியில் வைத்துக் கொஞ்சுவது பொருந்துமா? இந்த ஏழைகளின் நெஞ்சில், பட்டாடைகள், முத்துக்கள், பாலன்னங்கள், பஞ்சனைகள் என்றெல்லாம் ஆசைகளை வளர விடலாமா? கல்திரிகையில் கலம் தானியம் கட்டி இழுத்து மாவாக்க வேண்டும்... மணி மணியாக தானியம் குற்றி உமி போகப் புடைத்து வைக்கவேண்டும்... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?...”

அவளுடைய நெஞ்சை இனந்தெரியாத சுமை அழுத்துகிறது.

அந்தப் பருவத்தில், அரண்மனைத் தோட்டத்தில் தான் ஆடிப்பாடி மகிழ்ந்ததை நினைவூட்டிக் கொள்கிறாள்.

உணவு இறங்கவில்லை.