பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

17

இளையவர் கொடுத்த தண்டனை மூக்கையும் செவிகளையும் கூர்ந்த ஆயுதத்தால் அரிய அவள் இரத்தம் சொரியத்துடிதுடித்து ஒடிய காட்சியில் அவள் அடிவயிறு சில்லிட்டுப் போயிற்று. அச்சம்.... மானைக்கொன்று உணவுபக்குவம் செய்து தருவார்கள். கொல்லும் குரூரம் தவிர்க்கும் அச்சம்தான் அவளை அன்று அந்த மானை உயிருடன் பிடித்துத் தரக் கேட்கச் செய்தது.

அது மாய மானாக இருந்தாலும் அன்பு செலுத்தி வளர்த்தால் தீய எண்ணம் மாயுமே என்று பேதையாக நினைத்தாள். பிடிவாதமாகப் பிடித்துத் தரவேண்டினாள்... ஆனால், என்னவெல்லாம் நடந்துவிட்டது!

“தேவி, வெற்றிலையை மெல்லாமல் துப்பிவிட்டீர்களே” என்று எச்சிற் கலத்தைப் பார்த்தபடி அவந்திகாகேட்கிறாள்.

“எனக்கு எதுவும் இப்போது பிடிக்கவில்லை தாயே!”

‘தாயே’ என்று சொல்லும் போது குரல் தழுதழுக்கிறது... இவள்தாய் தான். ஆனால் பணிப்பெண்ணாகிய அடிமை.ழ்ழ

“நீங்கள் எல்லாரும் போங்கள். தேவி சற்று தனிமையில் இளைப்பாறட்டும்” என்று அவந்திகா அவர்களை அப்புறப்படுத்துகிறாள்.

பூமகளை மெல்ல மஞ்சத்தில் சாய்த்தவாறு துகில் கொண்டு மேலே போர்த்துகிறாள்.

இதமாக நெற்றியை வருடுகிறாள்.

“..... தாயே, மன்னர் இந்தப் பக்கம் வந்து மூன்று நாட்களாகின்றன...”

நெஞ்சம் பொறாமல் வரும் சொற்கள்...

“தேவி, இதற்காகவா வருந்துகிறீர்கள்? அரசாங்கக் காரியங்கள் என்றால் அவ்வளவு எளிதா? இப்போது, தங்கள் பதி என்பதுடன், இந்த நிலையில் தங்களுக்கு அமைதியும் ஒய்வும் வேண்டும் என்ற கடமை வுணர்வும் கட்டிப்போடும். கண்களை மூடிச் சற்றே உறங்குங்கள்...”

ஆனால் அமைதி வரவில்லை.

வ. மை. - 2