பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

29

பரிவாரங்களுடன் தேவியை அழைத்து வந்து அவள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார். நாங்கள் எதிர்பார்த்து இருப்போம். விடை கொடு, தாயே?”

அவருடைய கரம், அவள் உச்சியில் பதிகிறது. வாழ்த்தி விடை பெறுகிறார்.

அடுத்த கணம் அவர் திரும்பிச் செல்கிறார். ரீம் ரீம் ரீம்... என்ற சுருதி ஒலிக்கிறது. அந்த சுருதியில் எழும் கீதம்... அது என்ன கீதம்? பறவைகளின் இன்னொலி, அணிலின் குரல். வண்டின் ரீங்காரம். பாம்பின் சீறல், யானையின் பிளிறல், நாயின் செல்லக் குலைப்பு... எல்லாம்... எல்லாம் புவியின் இசை. பூமகளின் சுவா சமாகிய சுருதியில் எழும் கீதங்கள்... யாரோ குழலூதுகிறார்கள். யார்..?

சூரியனின் வெப்பம் தணிந்த கதிர் அவள்மீது விழுகிறது.

அவந்திகா தோட்டத்துக்குள் ஆடுகளை ஓட்டி வந்து விட்ட பையனை விரட்ட ஓடுகிறாள். அவன்தான் குழல் ஊதியிருப்பான்.

அவன் ஆடுகளை விரட்ட, அவை மே, மே என்று கத்துகின்றன.

அபசுரம்...

“அவந்திகா!”

“தேவி!.”

“வாயில்லாப் பிராணிகள். ஏன் விரட்டி அடிக்கிறீர்? பையன் குழலூதினானா? அவனை அழைத்து வா?”

“அத்துணை பூஞ்செடிகளையும் மேய்ந்துவிட்டன, தேவி. பையன் குழலூதுவதில் கவனிக்கவில்லை. வேண்டாம், தேவி. அவன் அப்போதே அஞ்சி ஓடிவிட்டான்!”

அப்போது சாமளி ஓடி வருகிறாள்.

“மூத்த மகாராணியார், தங்களைக் காண ஒரு பட்டு வணிகரை அனுப்பியுள்ளார்?..”

அவள் திரும்புகிறாள். ஆனால் ஏனோ உள்ளம் கனக்கிறது.