பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

33

“வணிகரே, இதே போல் எனக்கு இன்னொரு ஆடை நெய்து வாருங்கள்.”

“நிச்சயமாகத் தருவோம். ஆனால் ஓராண்டாகும். ஏனெனில் இந்தப் பட்டுக்கூடு, இயற்கையிலேயே இத்தகைய நிறம் கொண்டிருக்கும். எப்போதும் கிடைக்காது. அபூர்வமாகவே கிடைக்கும். அதனாலேயே விலை மதிப்பற்றது. மகாராணி கேட்பதால் நிச்சயமாக அடுத்த பருவத்தில் கொண்டு வருவோம்....”

வேறு யாரும் எதுவும் கூறுமுன், ஜலஜை, “வணிகரே, மகாராணி, இந்த நிலையில் கேட்கும் போது, அடுத்த பருவம் என்று சொல்கிறீரே? ராணி மாதா என்ன சொல்லி அனுப்பி வைத்தார்? இவை அனைத்தும் எம் பரிசாகக் கொடுத்துவிட்டு இன்னும் என்ன விரும்பினாலும் கேட்டு வாரும் என்றுதானே சொன்னார்? சக்கரவர்த்தியின் தேவியாருடன் பேசுவதான நினைவில் ஆம் - சொல்ல வேண்டாமா?” வணிகரின் முகம் இறுகிப் போகிறது.

பூமகள் துணுக்குறுகிறாள். இந்தப் பணிப் பெண் எதனால் இவ்வாறு பேசுகிறாள்? அவர் கூறுவதில் என்ன தவறு?

“சரி, வணிகரே, உங்களுக்கு மிகவும் நன்றி. அற்புதமான கலைஞரின் படைப்புகள் இவை. தெய்வாம்சம் பொருந்திய விரல்களால் மட்டுமே இப்படிப் படைக்க முடியும். நான் மிகவும் நேசிக்கும் ஓர் அன்னைக்கு இது போல் ஓர் ஆடை வேண்டு மென்று விரும்புகிறேன், உரிய பருவத்தில் நெய்து கொண்டு வந்தாலே போதும். அந்தக் கலைஞர்களை நான் பாராட்டுகிறேன்...”

“அவந்திகா, வணிகரிடம் தனியாக ஓர் ஆயிரம் பொன் பரிசு கொடுக்கச் சொன்னதாகப் பெற்றுக் கொடுப்பாய்!” என்று முடிக்கிறாள். அவந்திகா ஜலஜையை உறுத்துப் பார்த்துவிட்டுச் செல்கிறாள்.

பணிப் பெண்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டு செல்ல, வணிகர் விடை பெறுகிறார். அடிமைகள் ஆடைகளை மீண்டும் அடுக்க, விமலை அவற்றை உள்ளறையில் உள்ள மரப்வ. மை. -3