பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வனதேவியின் மைந்தர்கள்

பெட்டிகளில், பூந்தாதுப் பொடிகளின் நறுமணம் கமழும் அறைகளில் வைக்கிறார்கள்.

“ஜலஜை, மன்னர் ராணி மாதாவின் மாளிகையில் இருக்கிறாரா?”

“மாளிகையின் கீழ்ப்புறத்துத் தாழ்வரையில் அமர்ந்து அமைச்சருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் அங்குதான் நான் உணவு கொண்டு போனேன்.”

“சரி, நீ போகலாம்.”

“மகாராணிக்கு மங்களம்...”

பட்டாடைகளைப் பத்திரமாக வைத்து விட்டுப் பணியாள அடிமைகள் சென்று விட்டனர். விமலையும் சாமளியும் மட்டுமே இருக்கின்றனர். விமலை ஏதோ ஒரு விளக்கைப் பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறாள். அது நாய்த்தோல் என்று கூறினார்கள். நாய் வேட்டைக்கு மனிதருக்குத் துணையாகும் நாய். நன்றி மறவாத பிராணி. காட்டு நாய் கூட வீட்டு நாயாக மாறி இருப்பதை அவள் அநுபவித்திருக்கிறாள். வாலை ஆட்டிக் கொண்டு அவள் அருகே நிற்கும். அரக்கப் பெண்கள் கொண்டு வரும் உணவு வகைகளைப் போடுவாள். காகம், நாய், இரண்டுமே பங்கு போட்டுக் கொள்ளும். அத்தகைய நாயின் தோல், பளிங்கையும், பொன்னையும் மினுமினுப்பாக்குகிறது!... வேடுவப் பெண்கள் இவ்வாறு தோல்களை உரித்துப் பதமாக்கிக் கொண்டு வருவார்கள். அடிமைப் பெண்கள் இது போன்ற பணிகளைச் செய்து, முனிவருக்கும் வசதியாக உடுக்க, இருக்க, படுக்க தோல்கள் தயாரிப்பார்கள்...

எதை எதையோ மனம் நினைக்கிறது. நந்தமுனி வந்து உள்ளே முகிழ்ந்திருந்த ஆசைக்கனலுக்கு உயிரூட்டி விட்டார்...

“தேவி?.”

அவந்திகா இவள் முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றாற்போல் அழைக்கிறாள். கண்ணிதழ்கள் ஈரம் கோத்திருக்கின்றன.