பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வனதேவியின் மைந்தர்கள்


மென்மையான உணர்வில் பதிகின்றன."இல்லை, தேவி. நான்தான் கேட்கிறேன். மன்னருக்குப் பணி செய்ய, எதற்காக இத்தகைய இளசுகளை அனுப்ப வேண்டும்? என் போன்ற மூத்த பெண்கள் இல்லையா? பல் விழுந்தவள், சதை சுருங்கியவள், முடி நரைத்தவள் என்றால், ஒரு மகனைப் போல் வாஞ்சையுடன் பழகுவாள், பணி செய்வாள். தோல் சுருங்கிய காலத்தில் ஒரு பிடிப்பு என்று பக்தியுடன் எல்லாம் செய்வாள்....”

சாதாரணமாக இப்படி அவந்திகா ஏதேனும் பேசினால் பூமகளுக்குச் சிரிப்பு வந்து விடும். நேராக விஷயத்துக்கு வராமல், தொடாமல், பொருளை உணர்த்திவிடும் தனித்தன்மை உண்டு அவளிடம்,

“இந்த ஜலஜையின் தாயார் கணிகை மகளா?”

“யார் கண்டார்கள்? எல்லாம் ஒரு பொழுது மோகம். அது தீர்ந்ததும் சிறகுகள் முறியும். இந்த மோகம் அரசனுக்கில்லாமல் ஆண்டிக்கு வந்து ஒரு பிள்ளையைப் பெற்றிருந்தால் காட்டில் பிள்ளையுடன் அலைந்து கொண்டிருப்பாள். ஆண்டியே மன்னன் நிழலை அண்டுபவன் ஆயிற்றே! பிள்ளையானால் உபநயனம் இல்லாமல் குற்றேவல் செய்யும். பெண்ணானால் ஓர் அடிமை வருக்கத்தைப் பெருக்கும். காட்டுக்கு வேட்டைக்கு வரும் அரசன் எவனேனும் முகர்ந்து பார்த்து, கருப்பையை நிரப்புவான். தேவி, இந்தச் சனியன் பிடித்தவர்கள் பேச்சு இப்போது எதற்கு? நானே மன்னரைப் பார்த்தேன்.... உங்களைப் பற்றி விசாரித்தார். “பட்டாடைகள் நன்றாக இருக்கின்றனவா? உன் தேவியை நீ இரு கண்களைப்போல் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்! என்ன விரும்பினாலும் இச்சமயம் கொடுக்கக் கடமைப்பட்டவன். நீ வந்து என்னிடம் தெரிவிக்க வேண்டும். தேவி எக்காரணம் கொண்டும் இந்தச் சமயத்தில் வாட்டமுறலாகாது. கோசல நாட்டின் இந்த சூரியகுலத்தின் கொழுந்தைத் தாங்கி இருக்கிறாள் அவளை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்!” என்று சொன்னார்.

பூமகள் அவந்திகாவை உறுத்துப் பார்க்கிறாள்.