பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

37


‘இவளுக்குத்தான் எத்தனை அன்பு? உண்மையாகவே மன்னர் இதெல்லாம் சொன்னாரா? நிசமா? நம்பலாமா?’

“அவந்திகா! நீ பார்க்கும்போதும் ராஜாங்க ஆலோசனை மண்டபத்தில்தான் இருந்தாரா? இன்னும் யாரெல்லாம் இருந்தார்கள்? இளையவர்கள் இருந்தார்களா?”

“ஆமாம். இளையவர்கள் இல்லை. இளைய மகாராணியிடம் மன்னரை வரச் சொல்லி கேட்டு விட்டு வந்தேன். தேவி. நீங்கள் என் மடியில் வளர்ந்த குழந்தை. நீங்கள் மனம் சஞ்சலப்பட என்னால் பார்க்க முடியுமா?...” அவந்திகாவுக்குக் குரல் கரகரக்கிறது.

பூமையின் நெஞ்சம் விம்மித் தணிகிறது.

அவந்திகாவின் மார்பில் தலைசாய்த்துக் கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறாள்.

“தேவி, எனக்கு என்ன பயம் தெரியுமா? காட்டிலே அரக்கர் தங்கை வந்து சீண்டிய போது அவள் மூக்கையும் காதையும் இளையவர் அரிந்தார். அதனாலேயே தேவியை அரக்கன் பழிவாங்கச் சிறையில் இருத்தக் கொண்டு போனான். அதுபோல் இவள் ஏதேனும் தெரியாமல் விட்டில் பூச்சிபோல் நெருங்க, அதனால் இந்த சமயத்தில் ஏதேனும் அவம் நேர்ந்துவிடக் கூடாதல்லவா?... தேவி, இது குறித்து மகாராணியிடம் நான் எச்சரிக்கை செய்ய முடியாது. இளைய மகாராணி, அன்பானவர். எங்களை மனிதர்களாய் மதிக்கிறவர். மற்ற இருவரும் அப்படி இல்லை. அவர்களுக்கு நான் வெறும் அடிமைப் பெண். பூமகளுடன் வந்த அடிமை. என்னால் எதையும் சொல்ல முடியாது; செய்ய முடியாது. தாங்கள் இது குறித்து, அன்பாகப் பழகும் இளைய மகாராணியிடம் எடுத்துச் சொல்லலாம்.”

அவள் முடியை அன்புடன் கோதிக் கொண்டு அவந்திகா பேசுவது, பூமகளின் இதயத்துள்ளே ஒளிந்திருக்கும் அபகரத்தை மெல்ல மீட்டிவிட்டாற் போலிருக்கிறது. யாழின் நாண் தளர்ந்து விட்டால் இப்படித்தான் ஒலிக்கும். நாண் தளர்ந்து கிடக்கிறது.