பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வனதேவியின் மைந்தர்கள்

அல்லவே? கேலியில் விளைந்த விளையாட்டல்லவோ? வயசு இரண்டு தலை முறை மூத்திருந்தாலும், அடிமை பணிக்கிழவி. அவளுக்கு முதுகுமட்டும் வலிக்கவில்லை. நெஞ்சும் வலித்திருக்கும். மன்னரிடம் வரம் கேட்கச் சொல்லி பழி தீர்த்துக் கொண்டாள்...

அவந்திகாவை, இப்போது அவளுக்குப் பிறக்கப் போகும் பிள்ளை இப்படி உதாசீனம் செய்தால்.

அவள் கை தன்னையறியாமல் வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறது.

... ஒ. க்ஷத்திரிய வித்து. வில் அம்புடன் பிறக்குமோ?. குப்பென்று வேர்க்கிறது.

“தேவி. என்ன இது? நீங்கள் உறங்கவில்லையா? ஏணிப்படி முகமெல்லாம் வேர்த்திருக்கிறது? யாரடி, விமலை? தீபத்தில் எண்ணெய் இல்லை. பார்க்க வேண்டாமா?”

அவந்திகாவின் தொட்டுணர்வில் கசிந்து போகிறாள்.

அவள் கையை மெலிந்த விரல்களால் முகத்தில் தடவிக் கொள்கிறாள்.

“அவந்திகா, உன்னை நான் எப்போதும் விடமாட்டேன்! நீ என் தாய்!”

4

“தேவி, மன்னர் இன்று மாலை செண்பகக் குளக்கரையில் தோட்டத்துக்கு வருகிறாராம். சேதி சொல்லச் சொன்னார்...”

அவந்திகா பூமகளின் கூந்தலில் தைலம் பூசிக் கொண்டிருக்கிறாள். செய்தி கொண்டு வந்தவள் சலவைக் காரனின் மகள், கனகாவோ ஏதோ பெயர். கறுப்பிதான். அழகான நீண்ட கண்கள். பருத்த தனங்கள், தோள்கள், இவள் போட்டுக் கொண்டிருக்கும் மணிமாலைகள் மேடேறி இறங்குவதை